கோவை அரசு மருத்துவமனையில் இதுவரை 28 நோயாளிகளுக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை
கோவை அரசு மருத்துவமனை யில் இதுவரை 28 நோயாளி களுக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளதாக டீன் நிர்மலா தெரிவித்தார்.
உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை தொடங்கிவைத்து டீன் நிர்மலா கூறியதாவது: பெரும்பாலானோருக்கு எந்த விதமான அறிகுறியும் இல்லாமல் சிறுநீரக நோய் பாதிப்பு ஏற்படுகிறது.
இதை தற்காலிக பாதிப்பு, நிரந்தர பாதிப்பு என இரண்டு வகைப்படுத்தலாம். பாம்பு கடி, நோய் தொற்று, மருத்துவரின் அனுமதியின்றி எடுத்துக்கொள்ளப்படும் வலி நிவாரண மாத்திரைகள், எலிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு காரணமாக தற்காலிக பாதிப்பு ஏற்படுகிறது.
சர்க்கரை நோய், நீண்டநாள் அதிக ரத்த அழுத்தம், பரம்பரை வியாதிகள் ஆகியவற்றால் நிரந்தர பாதிப்பு ஏற்படுகிறது. சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டால் கை, கால் வீக்கம், இரவில் அதிக சிறுநீர் வெளியேறுதல், ரத்த அழுத்தம், பசியின்மை, உடல்சோர்வு, வாந்தி, மயக்கம், மூச்சு வாங்குதல் போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். சிறுநீரகம் 85 முதல் 90 சதவீத அளவுக்கு பாதிப்பு ஏற்படும் வரை மருந்து, மாத்திரைகள் மூலம் பாதிப்பின் தீவிரத்தை குறைக்க இயலும்.
அவர்கள் சர்க்கரை, ரத்த அழுத்தத்தை முழு கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிகவும் அவசியம். நோயின் தீவிரம் மிகவும் அதிகமான நிலையில் உள்ளவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை அல்லது டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படும். கோவை அரசு மருத்துவமனையில் இதுவரை 28 நோயாளிகளுக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்வில் சிறுநீரகவியல் துறை தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
