Published : 11 Mar 2022 04:30 AM
Last Updated : 11 Mar 2022 04:30 AM

இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் அறிமுகம்; அரசு சேவைகளை மேம்படுத்தும் முதல்வரின் புத்தாய்வு திட்டம்: திறமையான இளைஞர்களை பயன்படுத்தி செயல்படுத்தப்படும்

சென்னை

திறமையான இளைஞர்களை பயன்படுத்தி அரசு சேவைகளை மேம்படுத்தும் முதல்வரின் புத்தாய்வு திட்டம் என்ற புதியதிட்டம் நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் செயல்படுத்தப்பட இருக்கிறது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு அமைந்த நிலையில், அடுத்து வந்த நிதிநிலை அறிக்கை மற்றும் துறைகள்தோறும் மானிய கோரிக்கை அறிவிப்புகளில் பல்வேறு புதிய திட்டங்கள் இடம் பெற்றிருந்தன.

அவற்றில் ஒன்றுதான், ‘முதல்வர் புத்தாய்வுத் திட்டம்’. சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் கீழ் வரும் இத்திட்டத்தை செயல்படுத்தும் நடவடிக்கையாக தற்போது திட்டத்துக்கான நிதி ஒதுக்கி, அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக இளைஞர்களின் திறமைகளில் அரசு அதிக நம்பிக்கைகொண்டுள்ளது. எனவே, இளைஞர்களை பயன்படுத்தி அரசு சேவைகளை மேம்படுத்த, புத்தாய்வு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, தொழில்முறை, கல்விப் பின்னணி அடிப்படையில் தகுதியான இளம் வல்லுநர்களை தேர்வு செய்து ஊக்க ஊதியத்துடன் 2 ஆண்டு புத்தாய்வு பயிற்சி அளிக்கப்படும்.

இவர்கள் மாநில அரசின் முதன்மை மற்றும் முன்னுரிமை திட்டங்களை செயல்படுத்துவதில் நேரடியாக ஈடுபடுத்தப்படுவார்கள். மேலும், முதல்வர் அலுவலகம், சம்பந்தப்பட்ட துறைகளின் வழிகாட்டுதலில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை மேற்கொள்வார்கள். திட்டங்களை கண்காணித்து செயல்பாட்டில் பிரச்சினை இருந்தால் அவற்றை களையவும், சிறப்பாக செயல்படுத்தவும் தேவையான முடிவுகளை எடுக்கவும் உதவியாக இருப்பார்கள்.

இத்திட்டம் நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது. கொள்கை செயல்திறன், இடைவெளியைக் கண்டறிதல், சர்வதேச அளவில் அவற்றுக்கான வரையறைகளை கட்டமைக்க, அறிவார்ந்த மற்றும் செயலாக்கம் நிறைந்த மனித வளத்தை உருவாக்குதல் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டத்துக்காக கல்வி நிறுவனம் ஒன்றுடன் இணைந்து, துறைகள்தோறும் திட்டங்களை கண்காணித்து, அவற்றின் சேவைகளை மேம்படுத்துதல், முக்கியமான செயல்பாட்டு குறியீடுகளை கண்டறிந்து அவற்றை செயல்படுத்துதல் உள்ளிட்டவை திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்தின்கீழ், நீர் ஆதாரங்களை அதிகரித்தல், விவசாய உற்பத்தி மற்றும் சந்தை தொடர்புகளை உருவாக்குதல், அனைவருக்கும் வீடு, கல்வித் தரத்தை மேம்படுத்துதல், சுகாதார குறியீடுகளை மேம்படுத்துதல், சமூக பங்களிப்பு, உள்கட்டமைப்பு மற்றும் தொழிற்சாலை மேம்பாடு, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு, நிறுவனக் கடன், பாரம்பரியம் மற்றும் கலை,பசுமை சமன்பாடு, தரவு அடிப்படையிலான நிர்வாகம் ஆகிய12 கருப்பொருட்கள் அடிப்படையிலான துறைகள் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதில், ஒரு துறைக்கு 2 பேர் வீதம் 24 பேரும், சிறப்பு திட்ட செயலாக்கத் துறையின் கண்காணிப்பு மையத்துக்கு 6 பேரும் என 30 இளம் வல்லுநர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு, திருச்சி பாரதிதாசன் மேலாண்மை நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது.அந்நிறுவனம் இளம் வல்லுநர்களை ஆன்லைன் தேர்வு, எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யும்.

பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவம் ஆகியவற்றில் முதல்வகுப்பு தேர்ச்சியுடன் இளநிலை பட்டம் பெற்றவராகவோ அல்லது கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் முதல் வகுப்பில் முதுநிலை பட்டம் பெற்றவராகவோ இருக்கலாம். பிஎச்டி முடித்தவர்கள், பணி, ஆராய்ச்சி அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தமிழ் மொழி அறிவு கட்டாயமாகும்.

22 முதல் 30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 35 வயது வரையும், பிசி, எம்பிசி பிரிவினருக்கு 33 வயது வரையும் தளர்வு அளிக்கப்படும். தேர்வு முறையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படும். தேர்வு ஆங்கிலம் மற்றும் தமிழில் நடத்தப்படும். தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.50 ஆயிரம் ஊதியம் மற்றும் போக்குவரத்து, தொலைபேசி, இணைய வசதி ஆகியவற்றுக்காக ரூ.10 ஆயிரம் அலவன்சு வழங்கப்படும்.

இதில் தேர்வு செய்யப்படுவோருக்கு முதலில் 30 நாட்கள் பாரதிதாசன் மேலாண்மை நிறுவனம் மற்றும் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்படும். அதன்பின், இளம் வல்லுநர்கள் 12 துறைகளில் திட்ட கண்காணிப்பு பணிகளில் அமர்த்தப்படுவார்கள். சம்பந்தப்பட்ட துறைகளில் ஒதுக்கப்பட்ட திட்டங்களை கண்காணித்தல், பிரச்சினைகளை கண்டறிதல், தரவுகள் அடிப்படையிலான முடிவுகள் எடுத்தல், திட்ட சேவையில் உள்ள இடைவெளியை கண்டறிதல் ஆகியவை ஆய்வாளர்களின் முக்கியமான பணியாகும்.

இதுதவிர அவர்கள், மாவட்டங்கள்தோறும் கள ஆய்வு மேற்கொண்டு, அதற்கேற்ப திட்டங்களை வகுக்க வேண்டும். மாதந்தோறும் திட்ட அறிக்கை தயாரித்து சிறப்பு திட்ட செயலாக்கத் துறையிடம் அளிக்க வேண்டும்.

2024 வரை இரண்டு ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும் இந்த புத்தாய்வு திட்டத்துக்காக தமிழக அரசு ரூ.5.66 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x