Published : 11 Mar 2022 04:15 AM
Last Updated : 11 Mar 2022 04:15 AM
சத்தியமங்கலம் புலிகள் சரணாலய பகுதியில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர வாகனங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும் என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் அமைந்துள்ள கோவை - பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில் வனவிலங்குகள் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழந்து வருவதாகக்கூறி வனவிலங்குகள் நல ஆர்வலரான வழக்கறிஞர் சொக்கலி்ங்கம் ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், இந்த வழித்தடத்தில் தினமும் 5 ஆயிரம் வாகனங்கள் சென்று வருகின்றன. கடந்த 2012 முதல் 2021 வரை 8 சிறுத்தைகள், ஒரு யானை, 71 மான்கள், 55 மயில்கள் என 135 வன விலங்குகள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளன. எனவே இவ்வழித்தடத்தில் இரவு நேரத்தில் கனரக மற்றும் இலகுரக வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்க வேண்டும், என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது. அதன்படி இவ்வழித்தடத்தில் மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை வாகன போக்குவரத்துக்கு தடை விதித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் கடந்த 2019-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தார். ஆனால் அந்த உத்தரவு பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக அமல்படுத்தப்படாமல் இருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கை கடந்த மாதம் விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை பிப்.10 முதல் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும், என உத்தரவிட்டிருந்தனர். இவ்வழித்தடத்தில் இரவுநேர வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பொது மக்களும், மாணவ, மாணவியரும், விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக்கூறி முன்னாள் எம்எல்ஏ பி.எல்.சுந்தரம் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி சார்பில் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி இந்த சாலையில் மாலை 6 முதல் மறுநாள் காலை 6 வரை வணிக வாகனங்கள், கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக்கூறி வழக்கு தொடர்ந்தவர்களுடன் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தும்படி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதால் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 5 மணிவரை 6 சக்கரங்களுக்கு மேல் உள்ள வாகனங்களுக்கு அனுமதியில்லை. அதேபோல இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணிவரை மருத்துவ அவசரம், பொது போக்குவரத்து வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லை. உள்ளூர் பொது மக்கள் உரிய அடையாள அட்டையைக் காண்பித்து தடையின்றி பயணிக்கலாம். அதேபோல பால்,காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்களுக்கும் இரவு நேரங்களில் விலக்கு அளிக்கப்படும்.
மனுதாரர்களின் கோரிக்கையின் அடிப்படையில் தற்போது இந்த சாலையில் கட்டண விலக்கு அமல்படுத்தப்படும். பர்கூர் வழியாக அந்தியூரிலிருந்து கர்கேகண்டி செல்லும் சாலை நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தால், அந்த சாலை சீரமைக்கப்பட்ட பிறகு அந்த வழித்தடத்திலும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் உள்ள மலைப்பாதையில் வனவிலங்குகளின் பாதுகாப்புக்காக வாகனங்களின் வேகத்தைக் குறைக்கும் வகையில் தேவையான வேகத்தடைகள் அமைக்கப்படும், என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT