

சென்னை: விரைவு ரயில்களின் ஏ.சி. பெட்டிகளில் பயணிப்போருக்கு மீண்டும் போர்வை, கம்பளிகள் வழங்கப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், விரைவு ரயில்களின் ஏ.சி. பெட்டிகளில் போர்வைகள் மற்றும் படுக்கைகள் வழங்குவது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது.
கரோனா பாதிப்பு குறைந்து வருவதால், விரைவு ரயில்கள் முழு அளவில் இயக்கம், முன்பதிவு இல்லாத ரயில்கள் இயக்கம், முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைப்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே, விரைவு ரயில்களில் ஏ.சி. பெட்டிகளில் மீண்டும் போர்வை, கம்பளிகள் வழங்க ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, அனைத்து ரயில்வே மண்டலங்களின் பொது மேலாளர்களுக்கு மத்திய ரயில்வே வாரியம் அனுப்பியுள்ள உத்தரவில், ‘‘கரோனா விதிமுறைகள் செயல்பாட்டுக்கு வந்ததால், ரயில்களில் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதனால் ரயில்களுக்குள்ளே சணல், கம்பளிப் போர்வைகள் மற்றும் திரைத் துணிகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.
இந்த கட்டுப்பாட்டை விலக்கிக் கொள்ள ரயில்வே நிர்வாகம் தற்போது முடிவு செய்துள்ளது. உடனடியாக இது அமலுக்கு வருகிறது. முன்புபோல பயணிகளுக்கு கம்பளி, போர்வை ஆகியவற்றை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.