

சென்னை மாநகரப் பகுதியில் சாலையோர மரங்களில் இருந்து உதிரும் இலைகளை மாநகராட்சி நிர்வாகம் தினமும் தீயிட்டு கொளுத்தி வருவதால், அதிலிருந்து வெளியேறும் புகை யால் பொதுமக்கள் அவதிக்குள் ளாகி வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் 4,127 உட்புற சாலைகள் உள்ளன. இவற்றில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. தற் போது கோடை காலம் என்பதால், மரங்களில் இருந்து அதிக அளவில் இலைகள் உதிர்கின்றன. சாலை களை தூய்மைப்படுத்த வரும் தொழிலாளர்கள், சாலையில் உதிர்ந்து கிடக்கும் இலைகளை ஆங்காங்கே குவித்து, தீயிட்டு கொளுத்துகின்றனர். அதை குப்பை வாகனத்திலோ, குப்பை தொட்டிகளிலோ கொட்டுவ தில்லை.
இந்த உட்புறச் சாலைகள் பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகளில் இருப்பதால், இலைகளை தீயிடும்போது ஏற்படும் புகையால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவ திக்குள்ளாகிறார்கள். மேலும் மாநகராட்சி பூங்காக்களில் உள்ள மரங்கள் மற்றும் செடி களில் இருந்து உதிரும் இலைகளும் முறையாக அகற் றப்படாமல், பூங்காவிலேயே குழி தோண்டி, அதில் கொட்டி எரித்து விடுகின்றனர். அதிலிருந்து நாள் முழுவதும் புகை வெளியேறி, பொதுமக் களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது.
இது தொடர்பாக கொடுங் கையூர் எம்.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது:
உச்ச நீதிமன்றமே பல்வேறு தீர்ப்புகளில் குப்பைகளை எரிக்க கூடாது என குறிப்பிட்டுள்ள நிலையில், மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து, இலைகளை எரித்து வருகிறது. எங்கள் பகுதியில் உள்ள பூங்கா மற்றும் பல்வேறு தெருக்களில் இலைகளை குவித்து தீயிட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியே புகை மூட்டமாக உள்ளது.
இதனால் ஞாயிற்றுக்கிழமை களில் கூட வீடுகளில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. புகையை சுவாசிப்பதால் மூச்சுத் திணறலும், கண் எரிச்சலும், இருமலும் ஏற்படுகிறது. இது தொடர்பாக கள அதிகாரிகள், பூங்கா மற்றும் சாலை தூய்மைப் பணியாளர்களிடம் தெரிவித்தும், இலைகளை எரிப்பதை நிறுத்தவில்லை என்றார்.
இது தொடர்பாக மாநகராட்சி யின் தண்டையார்பேட்டை மண்டல அலுவலக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அது தொடர்பாக ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.