Published : 11 Mar 2022 08:32 AM
Last Updated : 11 Mar 2022 08:32 AM

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 29 தமிழக மீனவர்கள் விடுவிப்பு: அரசு சார்பில் சென்னையில் வரவேற்பு

சென்னை: இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட 29 தமிழக மீனவர்கள்விடுவிக்கப்பட்டு நேற்று சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். சென்னையில் தமிழக அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

ராமேசுவரம், நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 29 மீனவர்கள் கடந்த ஜனவரி 27-ம் தேதி இரவு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்துத் பிடித்தனர்.

அவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களது படகு மற்றும் மீன் வலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், 29 மீனவர்களும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று அவர்களது குடும்பத்தினர், தமிழக அரசுக்கு கோரிக்கைவைத்தனர் மத்திய அரசின் வெளியுறவுத் துறை மூலமாக தமிழக மீனவர்களை விடுவிக்க முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டார்.

பின்னர், கைது செய்யப்பட்ட 29 மீனவர்களையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

தூதரக அதிகாரிகள் 29 மீனவர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்து, 14 நாட்கள் தனிமைப்படுத்தினர். அவர்களுக்கு பாஸ்போர்ட் இல்லாததால், இந்திய தூதரக அதிகாரிகள் எமர்ஜென்ஸி சான்றிதழ் வழங்கி, 29 மீனவர்களையும் நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் இலங்கையில் இருந்து சென்னைக்கு அனுப்பிவைத்தனர்.

சென்னை விமானநிலையத்துக்கு நேற்று அதிகாலை வந்த 29மீனவர்களுக்கும் தமிழக அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், மீன்வளத் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்த வாகனம்மூலம், அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

சென்னை விமானநிலையத்தில் மீனவர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘இலங்கை கடற்படையால் சிறைப் பிடிக்கப்பட்டுள்ள படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளைப் பெற்றுத்தர மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதைத் தடுக்க, நிரந்தர தீர்வுகாண வேண்டும். இலங்கை சிறையில் இருந்து எங்களை விடுதலை செய்து, சென்னைக்கு அழைத்துவர உதவிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x