

பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் குப்பைகளைக் கொட்ட சென்னை மாநகராட்சியை அணுக வேண்டும் என்று மேடவாக்கம் மற்றும் கோவிலம்பாக்கம் ஊராட்சிகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
மேடவாக்கம் ஊராட்சி சார்பில் அப்பகுதியில் உள்ள சிற்றேரியில் குப்பைகளை கொட்ட தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னையைச் சேர்ந்த எஸ்.பி.சுரேந்திரநாத் கார்த்திக் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். சிற்றேரியில் குப்பைகளை கொட்டவில்லை என மேடவாக்கம் ஊராட்சி மறுத்து வந்தது. ஏரிக்கு அருகில் கோவிலம்பாக்கம் ஊராட்சியும் வருவதால், அந்த ஊராட்சியும், இந்த வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டது.
இந்த மனு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி, தொழில்நுட்ப உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மேடவாக்கம் ஊராட்சித் தலைவர் ஆஜராகி, “இந்த ஊராட்சியில் தினமும் 2 டன் குப்பைகள் உருவாகின்றன. அதை சிற்றேரி அருகில் கொட்டி வந்தோம். பசுமை தீர்ப்பாய உத்தரவை அடுத்து கடந்த 6 மாதங்களாக அங்கு குப்பைகளை கொட்டுவதில்லை. மாற்று இடத்தில் கொட்டி வருகிறோம்” என்றார்.
அந்த இடமும் நீர்நிலை பகுதிதான் என்று மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கவுஷிக் சர்மா வாதிட்டார்.
அதைத் தொடர்ந்து, மேடவாக்கம், கோவிலம்பாக்கம் ஆகிய ஊராட்சிகள், தங்கள் பகுதியில் உருவாகும் குப்பைகளை பெருங்குடியில் உள்ள குப்பை கொட்டும் வளாகத்தில் கொட்ட, சென்னை மாநகராட்சியை அணுகி, உரிய அனுமதி பெற வேண்டும் என்று அமர்வின் உறுப்பினர்கள் உத்தரவிட்டனர். மனு மீதான விசாரணை மே 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.