சேலம்: சாலை விபத்தில் இறந்த நண்பரின் நினைவு நாளில் ரத்த தானம் வழங்கி  விழிப்புணர்வு

சேலம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த நண்பரின் நினைவு நாளில் அவரது பள்ளி தோழர்கள் ரத்த தானம் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
சேலம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த நண்பரின் நினைவு நாளில் அவரது பள்ளி தோழர்கள் ரத்த தானம் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
Updated on
1 min read

சேலம்: சேலம் அருகே சாலை விபத்தில் சிக்கி ஏராளமான ரத்தம் வெளியேறியதால் மரணமடைந்த இளைஞரின் நினைவு நாளில், அவரது நண்பர்கள் ரத்த தானம் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே உள்ள கை.புதுார் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் சீனிவாசன் (26 ) திருச்சியில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி திருச்சியில் இருந்து ஆட்டையாம்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் வந்தபோது, நடந்த சாலை விபத்தில் தலையில் பலத்த காயமநை்து சாலையோரம் மயங்கி விழுந்தார். இதில் தலையில் காயம் ஏற்பட்டு ஏராளமான ரத்தம் வெளியேறியதால் சீனிவாசன் மரணமடைந்தார்.

இச்சம்பவம் அவரது பள்ளியில் படித்த தோழர்கள் மற்றும் நண்பர்கள் மனதில் பெரும் வேதனை அடைய செய்தது. இதையடுத்து, சாலை விபத்தில் சிக்கி மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்களுக்கு ரத்தம், தானமாக வழங்குவதன் மூலம் உயிரை காப்பாற்றிட முடியும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட முடிவு செய்தனர். நண்பர் சீனிவாசன் நினைவு நாளில் ரத்த தானம் செய்து அவருக்கு அஞ்சலி செலுத்த அவரது பள்ளி தோழர்களும், நண்பர்களும் முடிவு செய்தனர்.

இதன்படி, கடந்த 2020-ம் ஆண்டு முதலாம் ஆண்டு நினைவு நாளில் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கிக்கு 25 நண்பர்கள் வந்து ரத்த தானம் செய்தனர். தொடர்ந்து இரண்டு வருடங்களாக நண்பரின் நினைவு நாளில் ரத்த தானம் செய்த நண்பர்கள், நேற்று (9-ம் தேதி) சீனிவாசனின் நினைவு தினத்தை கடை பிடித்தனர்.

தொடர்ந்து மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தில் நண்பர்கள், ஆட்டையாம்பட்டி கை.புதுாரில் ரத்த தானம் முகாம் நடத்தினர். இதில் ராசிபுரம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர்கள் முன்னிலையில் சுமார் 35-க்கு மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர்.

ஆண்டுதோறும் நண்பரின் நினைவு நாளில் ரத்த தானம் செய்து, விபத்தில் உயிருக்கு போராடுபவர்களுக்கு ரத்த தானம் வழங்கிட பொதுமக்கள் முன் வர வேண்டும் என்ற பள்ளி தோழர்களின் விழிப்புணர்வு நடடிக்கையை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in