

கூட்டணி முயற்சிகள் தோல்வி அடைந்துள்ள நிலையில் பாரிவேந்தர் தலைமையிலான ஐஜேகே, ஏ.சி.சண்முகம் தலைமையிலான புதிய நீதிக் கட்சி, தேவநாதன் தலைமையிலான இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், சதக்கத்துல்லா தலைமையிலான அகில இந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிட பாஜக முடிவு செய்தது.
180 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்த பாஜக கூட்டணி கட்சிகளுக்கு 54 தொகுதிகளை பிரித்துக் கொடுக்க திட்டமிட்டது. முதல் கட்டமாக 54 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கடந்த மார்ச் 25-ம் தேதி பாஜக வெளியிட்டது.
வரும் 13-ம் தேதி திருச்சியில் பாஜக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெறுகிறது. அதில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா பங்கேற்கிறார். எனவே, அதற்குள் கூட்டணியை இறுதி செய்து வேட்பாளர் பட்டியலை வெளியிட பாஜக திட்மிட்டு வருகிறது.
அதற்காக கடந்த ஒரு வாரமாக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சு நடைபெற்று வருகிறது. ஐஜேகே, தேவநாதன் கட்சி ஆகியவை தலா 40 தொகுதிகளைக் கேட்டு பிடிவாதம் பிடிப்பதால் பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளது.
இது குறித்து பாஜக தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, சிறிய கட்சிகளின் எதிர்பார்ப்பை ஏற்க முடியவில்லை. தொகுதிக்கு 500 ஓட்டுகள் கூட இல்லாதவர்கள் 40 தொகுதிகள் வேண்டும் என்கிறார்கள். இதுபோன்ற அடையாளம் இல்லாத சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைப்பதற்கு பதிலாக தனித்தே போட்டியிடலாம் என்றார்.