Last Updated : 10 Mar, 2022 06:25 AM

 

Published : 10 Mar 2022 06:25 AM
Last Updated : 10 Mar 2022 06:25 AM

பேரிடர் காலங்களில் மாணவர்கள் கல்வி பயில பாடங்களின் காணொலிகள் அடங்கிய கல்விச் செயலி உருவாக்கம்: ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்த பள்ளிக்கல்வித் துறை திட்டம்

சென்னை: பேரிடர் காலங்களில் மாணவர்கள் கல்வி பயில்வதற்கு ஏதுவாக, பள்ளிபாடங்களின் காணொலிகள், வினா வங்கித் தொகுப்புகள் அடங்கிய சிறப்பு கல்விச் செயலியை பள்ளிக்கல்வித் துறை ஜூன் மாதம் அறிமுகம் செய்ய உள்ளது.

தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,554 அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. இதில் 52.75 லட்சம் மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்தும் பணியில் 2.25 லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர்.

இதற்கிடையே, கரோனா பரவல் காலகட்டங்களில் அரசுப் பள்ளிகள் முழுமையாக செயல்பட முடியாத நிலை நிலவியது. ஆனால், தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு இணையவழியில் பாடங்கள், தேர்வுகளை நடத்தின. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகளை முன்னெடுப்பதில் பல்வேறு சிரமங்கள்இருந்தன. கல்வித் தொலைக்காட்சி மற்றும் வானொலி வாயிலாக பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்டாலும் அவை மாணவர்களுக்கு முழுமையாகப் பயனளிக்கவில்லை.

இதனால், அரசுப்பள்ளி மாணவர்களின் கற்றலில் பெரும் தேக்க நிலைஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்ய சிறப்பு கற்பித்தல் முறைகளை பள்ளிக்கல்வித் துறை அமல்படுத்தியுள்ளது. அதைத் தொடர்ந்து நோய்த்தொற்று, மழை வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாதவாறு இருக்க, சிறப்புகல்விச் செயலி ஒன்றை அறிமுகம்செய்ய கல்வித் துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: கல்வித் தொலைக்காட்சியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு தொடர்ந்து பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. அதை பின்பற்றுவதில் மாணவர்களுக்கு சிரமங்கள் இருக்கின்றன.

மேலும், தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் தொலைக்காட்சி வசதியும் முறையாக இருப்பதில்லை. யுடியூப் உள்ளிட்ட தளங்களில் காணொலிகள் பதிவேற்றம் செய்யப்பட்டாலும் அது மாணவர்களுக்கு முழுப் பயனை அளிக்கவில்லை. இதனால், கரோனா பரவல் காலத்தில் 30 முதல் 40 சதவீதம் மாணவர்கள் கற்றலில் பெரும் இடைவெளியைச் சந்தித்துள்ளனர்.

தற்போது டிஜிட்டல் தளங்கள் வழியிலான கற்பித்தல் வேகமாக வளர்ந்துவருகிறது. இதையடுத்து எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு சிறப்பு கல்விச்செயலி ஒன்று வடிவமைக்கப்பட்டு வருகிறது. பைஜூஸ், தீக் ஷா உள்ளிட்ட பிற செயலிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையான முழு பாடங்களின் விரிவான காணொலிகள் எளிய முறையில் இடம் பெற்றிருக்கும். மேலும், 10, 12-ம்வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு வினாவங்கி தொகுப்பு, சிறப்புப் பயிற்சி கையேடு, உயர் கல்விக்கான வழிகாட்டுதல்கள் இருக்கும்.

இவற்றை மாணவர்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இணைய வசதியில்லாதபோதும் செயலியில் காணொலிகளைப் பார்க்க முடியும். ஏதேனும் சந்தேகம் இருப்பின் அதை செயலியில் குறிப்பிட்டு பதில்களைப் பெறலாம். பள்ளிக்கல்வியின் இதர செயலிகளின் விவரங்களையும் ஒருங்கிணைத்து வழங்கப்படும்.

பேரிடர் காலங்களில் இந்த செயலிவழியாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்த செயலியை ஜூன் மாதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்துவைக்கும் வகையில் திட்டமிடப்பட் டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x