

சென்னை: நிலவின் மேற்பரப்பில் ஆர்கான்-40வாயு இருப்பதை சந்திராயன்-2 விண்கலம் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் நிலவின் தென்துருவத்தை ஆய்வுசெய்ய சந்திராயன்-2 விண்கலம்2019-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. பல்வேறுகட்ட பயணங்களுக்குப் பின் விண்கலத்தின் ஒரு பகுதியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.
அதே நேரம் திடீர் தொழில்நுட்பக் கோளாறால் விண்கலத்தின் லேண்டர் கலன் திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்கவில்லை. எனினும், ஆர்பிட்டர் நிலவை சுற்றிவந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் நிலவின் புறவெளி மண்டலம், சூரிய ஒளியின் தாக்கம், பருவநிலை, அங்குள்ள பள்ளங்கள், குரோமியம், மாங்கனீஸ் தாதுக்கள், பனிக்கட்டி வடிவில் நீர் இருப்பதற்கான ஆதாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்த அரிய தகவல்கள் ஆர்பிட்டர் ஆய்வில் கிடைக்கப் பெற்றுள்ளன.
அந்த வகையில் நிலவின் மேற்பரப்பில் ஆர்கான்-40 என்ற வாயு உருவாகி புறவெளி மண்டலம் வரை பரவி இருப்பதை ஆர்பிட்டர் கலனில் உள்ள சேஸ்-2 என்ற கருவி தற்போது கண்டறிந்துள்ளது.
இதுபற்றி இஸ்ரோ வெளியிட்ட செய்திக்குறிப்பு: நிலவின் புறவெளி மண்டலப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து சேஸ்-2 கருவி ஆய்வு செய்து வருகிறது.
அதில் நிலவின் மேற்பரப்பில் உருவாகும் ‘ஆர்கான்-40' வாயுபுறவெளி மண்டலம் வரை பரவிஇருப்பது உறுதிசெய்யப்பட்டது. குறிப்பாக நிலவின் மத்திய மற்றும் உயர் அட்சரேகைப் பகுதியில் ஆர்கான்-40 அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் அவை புறவெளி மண்டலத்தில் மட்டுமே இருப்பதாக கருதப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது சந்திராயன்-2 ஆய்வில் ஆர்கான்-40 வாயுவின் இயற்பியல் கோட்பாடுகள் குறித்த முழு தகவல்கள் திரட்டப்பட்டு உள்ளன. இது நிலவு தொடர்பான ஆய்வில் முக்கிய மைல்கல்லாகும். மேலும், இதன் தரவுகள் அடுத்தகட்ட ஆய்வுகள், நிலவின் பயணங்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.