

காங்கயம் அருகே உள்ள வட்டமலைக்கரை ஓடை தடுப்பணையில் இருந்து 25 ஆண்டுகளுக்கு பின், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால், ஒரு தலைமுறையின் கனவு நிறைவேறியதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டம் வட்டமலைக்கரை ஓடை தடுப்பணையில் 25 ஆண்டுகளுக்கு பின், கடந்த டிசம்பர் மாதம் பிஏபிவாய்க்காலில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டது.
இதையடுத்து, தடுப்பணையின் நீர்மட்டம் 22 அடிக்கு நிரம்பியது. இதையடுத்து 6,043 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில்,கடந்த 6-ம் தேதிமுதல் பாசனத்துக்குதண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால்பிரதான வாய்க்காலில் சில இடங்களில் தூர்வாரப்படாததால், தண்ணீர் திறப்பதில் தாமதம் ஏற்பட்டது.தடுப்பணைப் பகுதியில் இடதுமற்றும் வலது கரை வாய்க்கால்களை சீரமைக்கும் பணியில் நீர்வள ஆதாரத் துறையினர், கடந்தசிலவாரங்களாக ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் தடுப்பணையில் இருந்து பாசனத்துக்கான தண்ணீரை, தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மலர்கள் தூவி நேற்று திறந்து வைத்தார். இதன்மூலம், முலையாம்பூண்டி, குமாரபாளையம், அக்கரைபாளையம், நாச்சிபாளையம், மயில்ரங்கம்என தடுப்பணையின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 6,043ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும். இடது மற்றும் வலதுபுற பிரதான கால்வாய் வழியாக, விநாடிக்கு 40 கன அடி வீதம் இரு வாய்க்கால்களிலும் நீர் திறக்கப்பட்டது. மொத்தம் மூன்று சுற்றுகளாக 21 நாட்களுக்கு உரிய கால இடைவெளியில் தண்ணீர் திறக்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 25 ஆண்டுகளாக தண்ணீர்வரத்து இன்றி வறண்டு இருந்த வட்டமலைக்கரை தடுப்பணையில் நீர் இருப்பு வைக்கப்பட்டு, 1997-ம்ஆண்டுக்கு பின் தற்போது பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, ‘‘எங்கள் பகுதியில் தடுப்பணையில் தண்ணீர் இல்லாததால், விவசாயம் பொய்த்தது. இதனால் சில விவசாயிகள் ஊரை காலி செய்துவிட்டு, திருப்பூர், கோவைபோன்ற தொழில் நகரங்களில் தஞ்சமடைந்தனர். 25 ஆண்டுகளுக்குபிறகு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், ஒரு தலைமுறையின் கனவுக்கு உயிரூட்டப்பட்டுள்ளது’’ என்றனர்.