

சோழவரத்தை ஒட்டியுள்ள பகுதிகளில், மாதவரம் சட்டப் பேரவைத் தொகுதியின் நிலை கண்காணிப்புக் குழுவினர் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், சோழவரம் அருகே உள்ள விஜய நல்லூர் சுங்கச்சாவடி அருகே சாலையோரம், 121 விலையில்லா கிரைண்டர்கள் மற்றும் 4 விலையில்லா மிக்ஸிகள் கேட்பாரற்றுக்கிடந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, துணிகளால் சுற்றப்பட்டு கிடந்த அந்த விலையில்லா கிரைண்டர்கள் மற்றும் மிக்ஸிகளை நிலை கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கிரைண்டர்கள் மற்றும் மிக்ஸிகள் மாதவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, சோழவரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விலையில்லா கிரைண்டர்கள் மற்றும் மிக்ஸிகள் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக சாலை யோரத்தில் குவிக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.