Published : 10 Mar 2022 06:30 AM
Last Updated : 10 Mar 2022 06:30 AM
சென்னை: நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் தலைவர்கள் பங்கேற்றனர்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்ப வலியுறுத்தியும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் சென்னையில் 2 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று தொடங்கியது.
இப்போராட்டத்தை கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தொடங்கி வைத்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசும்போது, “நீட் விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவையில் 2-வது தடவையாக சட்ட மதோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த முறை ஆளுநர் அதனை நிராகரிக்க முடியாது என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். நீட் விலக்கு மசோதாவுக்கு அனுமதி அளிக்கும் வரை போராடும் வகையில் இப்போராட்டம் அமைந்துள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக மட்டுமல்லாமல், சனாதன சக்திகளின் சூது, சூழ்ச்சி, சதியையும் புரிந்து கொண்டு அதனை எதிர்த்தும் போராட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசும்போது, “நீட் தேர்வுக்கான நுழைவுத் தேர்வை தொழில்கல்வி, கல்லூரி, பல்கலைக்கழக படிப்பு என அனைத்து படிப்புகளுக்கும் கொண்டு வரும் ஆபத்து உள்ளது என்பதை தமிழக மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும். ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏற்புடையதல்ல'' என்றார்.
மனித நேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இப்போராட்டத்தில், இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், மாநி்லச் செயலாளர் வி.மாரியப்பன், மத்தியக் குழு உறுப்பினர் நிரூபன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT