

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு சென்னையில் இன்று தொடங்குகிறது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்டி, எம்எஸ் உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு 854 இடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான நுழைவுத் தேர்வை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். 7,580 பேர் தர வரிசைப் பட்டியலில் இடம் பிடித்தனர்.
இந்நிலையில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று தொடங்கியது. முதல் நாள் நடந்த மாற்றுத்திறனாளிகள் பிரிவு கலந்தாய்வுக்கு 19 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். கலந்தாய்வில் பங்கேற்ற 18 பேரில், 14 பேர் கல்லூரியில் சேருவதற்கு அனுமதி கிடைத்தது. பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. கலந்தாய்வில் பங்கேற்குமாறு 2,550 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வரும் 12-ம் தேதி வரை (சனி, ஞாயிறு தவிர) கலந்தாய்வு நடைபெற உள்ளது.