

தமிழகத்தில் 20 சுங்கச்சாவடிகளில் கட்டண மாற்றம் நேற்று அமலுக்கு வந்தது. சில வகை வாகனங்களுக்கு கட்டணம் ரூ.5 வரை உயர்த்தப்பட்டுள்ளது. வேறு சில வகை வாகனங்களுக்கு ரூ.5 வரை குறைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
2008-ம் ஆண்டு டிசம்பர் மாத ஒப்பந்தத்தின்படி ஏற்படுத்தப்பட்ட சுங்கச்சாவடிகளுக்கு ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தில் மொத்தவிலை குறியீட்டு எண் அடிப்படையில் கட்டணம் மாற்றி யமைக்கப்படும். இந்த ஆண்டில் பெரிய அளவில் கட்டணம் உயர்த் தப்படவில்லை. குறிப்பிட்ட சில வாகனங்களுக்கு மட்டும் கட்டணம் 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. கார், வேன் போன்ற வாகனங்களுக்கு கட்டணம் மாற்றப்படவில்லை.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
சில வாகனங்களுக்கு ரூ.5 குறைவு
தேசிய நெடுஞ்சாலைத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தமிழகத்தில் உள்ள 42 சுங்கச்சாவடிகளில் குறிப்பிட்ட 20 சுங்கச்சாவடிகளுக்கு மட்டும் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டு ஏப்ரல் 1-ம் தேதி (நேற்று) முதல் அமலுக்கு வந்துள்ளது. சில பிரிவு வாகனங்களுக்கு ரூ.5 வரை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. சில பிரிவு வாகனங்களுக்கு ரூ.5 கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வேறு சில பிரிவு வாகனங்களுக்கு கட்டணம் மாற்றப்படவில்லை’’ என்றார்.