பண்ணாரி - திம்பம் சாலையில் போக்குவரத்து நெரிசல்: ஆளில்லா விமானம் மூலம் நெடுஞ்சாலைத்துறை ஆய்வு

பண்ணாரி - திம்பம் சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கான காரணம் குறித்து ஆளில்லா விமானம் மூலம் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
பண்ணாரி - திம்பம் சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கான காரணம் குறித்து ஆளில்லா விமானம் மூலம் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
Updated on
1 min read

பண்ணாரி - திம்பம் சாலையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்ய, ஆளில்லா விமானம் மூலம் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழகம் - கர்நாடக மாநிலங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில், பண்ணாரி முதல் திம்பம் வரையிலான சாலை 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்டதாகும். அடர்ந்த வனப்பகுதியின் வழியாகச் செல்லும் இச்சாலையைக் கடக்கும் வனவிலங்குகள் இறந்து போனதையடுத்தும், விலங்குகளைப் பாதுகாக்கும் வகையிலும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் இச்சாலையில் இரவு நேர போக்குவரத்துக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மேலும், திம்பம் மலைச்சாலையில் அடிக்கடி வாகனங்கள் பழுதடைந்து நிற்பதும், விபத்துக்குள்ளாவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால், கடுமையான போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதற்கான காரணத்தை அறியும் வகையில், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், திம்பம் சாலையில் வனவிலங்குகள் சாலையைக் கடந்து செல்லும் வகையில், சில இடங்களில் உயர்மட்ட பாலம் அமைக்க சாத்தியமுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு தொடங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, பெங்களூருவில் இருந்து வந்திருந்த தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், திம்பம் சாலையில் ஆளில்லாத விமானம் மூலம் ஆய்வு மேற்கொண்டனர். பண்ணாரி அம்மன் கோயில் முதல் திம்பம் வரையிலான சாலை அமைப்பு, கொண்டை ஊசி வளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஆய்வு அறிக்கை உயர் அதிகாரிகளுக்கு சமர்பிக்கப்படவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in