Published : 09 Mar 2022 05:36 PM
Last Updated : 09 Mar 2022 05:36 PM

திருப்பூர் மாநகராட்சி அரசுப் பள்ளிகளின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கணக்கெடுப்பு: சாதியை விசாரித்ததாக பொதுமக்கள் புகார்

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் அரசுப் பள்ளிகளின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பள்ளி செல்லாத குழந்தைகள் உட்பட மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டவர்கள், சாதியை விசாரித்ததாக அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சியில் அரசுப் பள்ளிகளின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 0-5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 6 -14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. இதில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாநகராட்சி 54-வது வார்டுக்கு உட்பட்ட கல்லாங்காடு பகுதியில், கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்ட கொசு ஒழிப்புப் பணியாளர்கள் சாதியை கேட்டதாகக் கூறி அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, கல்லாங்காட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெயபிரகாஷ் கூறியது: ”வீடு, வீடாக சென்ற இருவர், பெயர், வயது, வீட்டில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கேட்டறிந்தனர். இதற்கு எல்லாம் பதில் சொல்லியபோது, என்ன சாதி என்றும் கேள்வி எழுப்பினார்கள். சாதி எதற்கு என்று கேட்டபோது, கேட்கச் சொல்லி இருப்பதாகவும் தெரிவித்தனர். இதில் சந்தேகம் ஏற்பட்டது. நீங்கள் யார் என்று கேட்டபோது, டிபிசி பணியாளர்கள் என்று தெரிவித்தனர். அதற்கான அடையாள அட்டையை அவர்கள் அணிந்திருந்தார்கள். எதற்காக இந்த விவரங்கள் என்று கேட்டபோது, மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு என்று கூறினர். பின்னர் தீவிரமாக விசாரித்தபோது, அருகில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர் மேற்கண்ட விவரங்களை விசாரிக்க சொல்லியிருந்தார் என்று சொன்னார்கள்.

இந்த நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த அரசுப் பள்ளி ஆசிரியர், பள்ளி செல்லா குழந்தைகளைக் கணக்கெடுக்கிறோம். ஆகவே பள்ளி செல்லாத குழந்தைகளின் விவரங்களை சேகரிப்பதாக சொன்னார்கள். ஆனால் எந்த நோக்கத்துக்காக கணக்கெடுக்கிறார்களோ அதைவிட்டுவிட்டு, அனைத்து வீடுகளிலும் இருப்பவர்களின் விவரங்களையும், அவர்களது ஜாதியையும் கேட்பது எந்த விதத்தில் நியாயம்? இதனை யார் செய்ய சொன்னது என்று கேட்டபோது, அவர்களும் அங்கிருந்து சென்றுவிட்டனர். பலரும் தொழிலாளர்கள் என்பதால், பல வீடுகள் பகலிலேயே பூட்டித்தான் இருக்கும். என்ன காரணத்துக்காக இப்படிப்பட்ட புள்ளிவிவரங்களை சேகரிக்கிறார்கள் எனத் தெரியவில்லை. இதனால் எங்கள் பகுதியில் வசிப்பவர்கள் பலரும் குழப்பத்தில் உள்ளோம்” என்றார்.

சம்பந்தப்பட்ட அரசுப் பள்ளி தலைமையாசிரியர் கூறும்போது,”அரசு ஆண்டுதோறும் எடுக்கும் புள்ளிவிவரம் தான் இது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தான் எடுக்க வேண்டும். அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்திருப்பதால், கொசு ஒழிப்பு பணியாளர்கள் சென்றுள்ளனர். பள்ளி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர்களின் விவரங்களை சேகரித்து, அரசுக்கு அனுப்புகிறோம். சம்பந்தப்பட்டவர்கள் சாதி தேவை தேவையில்லை. அவர்கள் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் தேவைப்படும். சம்பந்தப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியரே, இனி நேரில் சென்று கணக்கெடுப்பார்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x