Published : 09 Mar 2022 03:17 PM
Last Updated : 09 Mar 2022 03:17 PM

கரூர், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்தி, வங்க மொழியில் 'ஆட்கள் தேவை' அறிவிப்பு சுவரொட்டி

கரூர் தெரசா முனை, தெரசா பள்ளி எதிரே ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்.

கரூர்: கரூர் மாநகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்தி, வங்க மொழியில் ஆட்கள் தேவை அறிவிப்பு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளன.

கரூர் மாநகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி, கொசுவலை, விசைத்தறி, பேருந்து கூண்டு கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. மேலும், பல்வேறு தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவற்றில் ஆட்கள் தேவை என்ற அறிவிப்பு வைக்கப்பட்டிருக்கும். கரூரில் வேலையில்லை என்பதில்லை. ஆட்கள் தான் தேவைப்படுகின்றனர்.

இந்நிலையில், கரூர் திருமாநிலையூரில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு ஆட்கள் தேவை என கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அதில் முதலில் ஆங்கிலத்தில் வாண்டட் என்றும், அதனை தொடர்ந்து இந்தி, வங்க மொழியிலும், 4வதாக தமிழில் 'வேலைக்கு ஆட்கள் தேவை' என அச்சிட்டுள்ளனர்.

மேலும், 'தமிழில் தறி ஓட்டுநர், தறி மெக்கானிக், சூப்பர்வைசர், பாவு ஓட்டுபவர் தேவை. முன் அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவமில்லாதவர்களுக்கு தகுதிக்கேற்ற சம்பளம் வழங்கப்படும்' என்ற வாசகம் இருவரின் செல்போன் எண்களோடு அச்சிடப்பட்டுள்ளது. மேலும் மேலே தமிழில் கூறியுள்ள வார்த்தைகள் இந்தி மொழியிலும் அச்சிட்டு, அதன் கீழே ஆங்கிலத்திலும் அச்சிட்டுள்ளனர்.

கரூரில் உள்ள கொசுவலை, தறி, செங்கல் சூளை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மேற்கு வங்கம் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த 7,000த்திற்கும் அதிகமானோர் பணியாற்றுகின்றனர். இவற்றில் பெரும்பாலானோர் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் கொசுவலை, தறி நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். அதனால் அவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் இந்தி, வங்கி மொழிகளில் ஆட்கள் தேவையென்ற அறிவிப்பு மற்றும் அது தொடர்பான விபரங்கள் இந்தியிலும் அச்சிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து சுவரொட்டியில் இருந்த எண்ணை தொடர்புக்கொண்டு பேசியபோது, ''கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொசுவலை, செங்கல் சூளை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வடமாநிலத்தவர் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தெரிந்து கொள்வதற்காக இந்தி, வங்க மொழியில் ஆட்கள் தேவை என்றும் பிற விவரங்களை தமிழ், இந்தி, ஆங்கிலத்தில் அச்சிட்டுள்ளோம்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x