Published : 09 Mar 2022 07:19 AM
Last Updated : 09 Mar 2022 07:19 AM

நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக சோதனை செய்ய தணிக்கை அலுவலர்கள் நியமனம்: மார்ச் 17-க்குள் சோதனையை முடிக்க கூட்டுறவுத் துறை உத்தரவு

சென்னை: கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தில், பயனாளிகள் விவரம் உள்ளிட்டவை குறித்த சோதனை தணிக்கைக்கு அலுவலர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் அதாவது 40 கிராம் வரை அடகு வைத்து அதன் பெயரில் கடன் பெற்றவர்களில் அரசு நிர்ணயித்த தகுதி அடிப்படையில் பயனாளிகளின் நகைக்கடனை தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது நடந்து வருகின்றன. ஏற்கெனவே நடைபெற்ற ஆய்வின்போது பல வங்கிகளில் போலி மற்றும் நகையே இல்லாமல் வங்கிக் கடன் பெற்றிருப்பது கண்டறியப்பட்டு, அவற்றின் மீதான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அவற்றின் அடிப்படையில் தகுதியானதாக 13 லட்சம் பயனாளிகள் பட்டியலை கூட்டுறவுத் துறை தயாரித்து, அவற்றின் மீது சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், சிறப்பு தணிக்கை மீது, தற்போது மீண்டும் தணிக்கை நடத்த கூட்டுறவு தணிக்கை இயக்குநர் இரா.லட்சுமி அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, பொது நகை கடன் தள்ளுபடி தொடர்பாக சிறப்பு தணிக்கை முடிக்கப்பட்ட வங்கி மற்றும் சங்கங்களில், மண்டல அளவில் கூடுதல் இயக்குநர், இணை, துணை இயக்குநர்கள், சரக கூட்டுறவு தணிக்கை உதவிஇயக்குநர்கள், அந்தந்த மண்டலங்கள், சரகங்களில் சோதனை தணிக்கையை தனித்தனியாக மேற்கொள்ள வேண்டும்.

முதல்கட்டமாக, நகர கூட்டுறவு வங்கி மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் 2-ம் கட்டமாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் இதர சங்கங்களில் மேற்கொள்ள வேண்டும்.

ஒரு அலுவலர் சோதனை மேற்கொண்ட கூட்டுறவு நிறுவனத்தை மீண்டும் பிற அலுவலர் சரிபார்க்கக் கூடாது.

இந்த சோதனையை வரும் மார்ச் 17-ம் தேதிக்குள் முடித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x