Published : 09 Mar 2022 07:32 AM
Last Updated : 09 Mar 2022 07:32 AM

டாஸ்மாக் மதுபான விலை உயர்வால் புதுச்சேரி எல்லையோர கடைகளில் கூட்டம் அதிகரிக்கும்

புதுச்சேரி: தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான விலை உயர்த்தப்பட்டதன் எதிரொலியாக புதுச்சேரி எல்லையோர மதுபான கடைகளில் கூட்டம்அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுச்சேரியில் தமிழகத்தைவிட குறைவான விலையில் மதுபானங்கள் கிடைத்து வந்ததால், அங்கிருந்து தமிழகத்துக்கு மதுபானங்களை கடத்தும் நிலைஇருந்தது. புதுச்சேரி அரசு கலால்வரியை கடந்த 2019 பிப்ரவரியில் உயர்த்தியது. 2019 ஜூலையில் மீண்டும் வரியை அரசு உயர்த்தியது. பின்னர் கரோனாவரி, சிறப்புவரி விதிக்கப்பட்டு, தமிழகத்துக்கு இணையான விலை புதுச்சேரியிலும் வந்தது. அதன்பிறகு புதுச்சேரியில் இருந்து மதுபானங்கள் கடத்தல் குறைந்தது.

தற்போது தமிழகத்தில் மதுபான விலை உயர்ந்துள்ளதால், மீண்டும்தமிழகம் - புதுச்சேரி இடையிலான விலை வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. மதுக்கடைகள் தரப்பில் விசாரித்தபோது, "மதுபானங்கள் விலைதற்போது தமிழகத்தில் உயர்ந்துள்ள சூழலில் தமிழக எல்லையோரம் உள்ள புதுச்சேரி மதுபானக்கடைகளில் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அத்துடன் மதுபானங்கள் விலை உயர்ந்ததில் இருந்து சாராயக்கடைகள், கள்ளுக்கடைகளிலும் அதிகளவு கூட்டம் உள்ளது. அக்கூட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது" என்றனர்.

புதுச்சேரியில் 5 மதுபான தொழிற்சாலைகளும் 85 மொத்த வியாபார உரிமங்களும், 500-க்கும்மேற்பட்ட சில்லரை வியாபார உரிமங்களும் உள்ளன. அனைத்தும் தனியார் மயமாகவே உள்ளது. புதுச்சேரியில் விலை நிர்ணயம் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. மதுபான உற்பத்தியாளர்களே விலை நிர்ணயம் செய்து வருகின்றனர். கலால்வரி வசூல் செய்வது, வரி ஏய்ப்பை தடுப்பது போன்ற பணிகளை மட்டுமே அரசு செய்து வருகிறது

அதிமுக கிழக்கு மாநில செயலர் அன்பழகன் கூறுகையில், "ஆண்டு ஒன்றுக்கு சுமார் 50 இலட்சம் ஐஎம்எப்எல் மதுபான பெட்டிகள் புதுச்சேரியில் உள்ள5 மதுபான தொழிற்சாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது தவிர வெளி மாநிலங்களிலிருந்து சுமார் 25 லட்சம் மதுபான பெட்டிகள் தருவிக்கப்படுகின்றன.

இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.6000 கோடியிலிருந்து ரூ.9000 கோடி வரை இருக்கும். ஆனால், அரசுக்கு கலால் வரி, கூடுதல் கலால் வரி, சிறப்பு கலால் வரி, உரிமைக் கட்டணம் ஆகியவைகளின் மூலம் சுமார் 900 கோடி ரூபாய் அளவில் தான் கிடைத்து வருகிறது.

தமிழகத்தில் மதுபானங்கள் டாஸ்மாக் மூலம் கொள்முதல் செய்யப்படுகின்றன. விலையை அரசே நிர்ணயம் செய்கிறது. சில்லரை வியாபாரிகள் அரசு நிர்ணயம் செய்த விலையில் கொள்முதல் செய்து நுகர்வோருக்கு விற்பனை செய்கின்றனர். இதன்மூலம் அரசுக்கு லாபம் கிடைக்கிறது.

புதுச்சேரியில் இந்த லாபம்தனியாருக்கு (மொத்த வியாபாரிகளுக்கு) செல்கிறது. இதை தடுக்க புதுச்சேரியிலும் அரசு நிறுவனம் ஒன்றை நிறுவி அதன்மூலம் கொள்முதல் செய்து கடைகளுக்கு விற்பனை செய்யவேண்டும். இதனால், அரசுக்கு ரூ.800 கோடியிலிருந்து ரூபாய் 1000 கோடி வரை கூடுதல் வருமானம் கிடைக்கும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x