

கோவையை தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம், பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் மனு அளித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
தெற்கு ரயில்வேயின் கீழ் கோவையை தலைமையிடமாகக் கொண்டு தனி ரயில்வே கோட்டத்தை உருவாக்க வேண்டும் அல்லது பாலக்காடு கோட்டத்திலிருந்து கோவையை முழுமையாக பிரித்து சேலம் கோட்டத்தில் இணைக்க வேண்டும். பொள்ளாச்சி-திருச்செந்தூர் விரைவு ரயிலை பாலக்காட்டுக்கு பதிலாக மேட்டுப்பாளையம் அல்லது கோவையில் இருந்து இயக்க வேண்டும். இதன்மூலம் கோவை பகுதியை தென் மாவட்டங்களுடன் இணைக்க முடியும். மாணவர்கள், வணிகர்கள், அலுவலகம் செல்பவர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கோவையில் இருந்து அருகில் உள்ள நகரங்களான பொள்ளாச்சி, மேட்டுப்பாளையத்துக்கு பாசஞ்சர் ரயில்களை இயக்க வேண்டும். கோவை மாநகரில் புதிய ரயில் பாதைகளை உருவாக்கி புதிய சர்க்யூட் ரயில்களை இயக்க வேண்டும். இதன்மூலம் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும். இதுதொடர்பாக ஆய்வு நடத்த வேண்டும். பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தி கோவை வடக்கு ரயில் நிலையத்தை, நகரின் இரண்டாவது சந்திப்பாக மேம்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.