

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் இயங்கும் கரித்தொட்டி ஆலை மீது வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுக்க, உடுமலை வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
உடுமலையில் வட்டாட்சியர் கு.கணேசன் தலைமையில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் பங்கேற்ற அமைதி பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. காவல் துணைக் கண்காணிப்பாளர் தேன்மொழிவேல், மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவிப்பொறியாளர் சதீஷ்குமார், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் செந்தில்குமார், விவேகானந்தன், விஜயசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
உடுமலையை அடுத்த பெரியபட்டி கிராமத்தில் அரசின் அனுமதியின்றி இயங்கும் தேங்காய் கரித்தொட்டி தொழிற்சாலை மூலமாக சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுவருகிறது. இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக சுமார் 2 மணி நேரம் விவாதம் நடைபெற்றது. இதையடுத்து, தொடர்புடைய ஆலை மீது உரிய சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கும்படி, குடிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வட்டாட்சியர் உத்தரவிட்டார்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, "தனியார் ஆலையால் பெரியபட்டி சுற்று வட்டாரத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து பல மாதங்களாக புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நேற்று (மார்ச் 8) முதல் வட்டாட்சியர் அலுவலகம் முன் தொடர் காத்திருப்புப் போராட்டம்நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, விவசாயிகளும் திரண்டனர். அதற்கு முன்னதாக, அமைதி பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் அழைத்ததால், போராட்டம் விலக்கி கொள்ளப் பட்டது. தற்போது நடவடிக்கை எடுக்க வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்க கால தாமதமானால், தொடர் போராட்டம் நடத்தப்படும்" என்றனர்.