

ஈரோடு: ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விற்பனை மையத்தை ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி தொடங்கி வைத்தார்.
இம்மையத்தில், ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த 50-க்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக்குழுக்களின் சார்பில் தயார் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள், புடவைகள், மண்பாண்ட பொருட்கள், பவானி ஜமுக்காளம், காட்டன், சணல் பைகள், மூங்கில் பொருட்கள், செயற்கை ஆபரணங்கள், பாக்கு மட்டை பொருட்கள், சிறுதானியங்கள், குண்டு வெல்லம், தேன், திண்பண்டங்கள், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், நாட்டுச் சர்க்கரை மற்றும் உலர் பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இந்த விற்பனை மையத்தில் உள்ளன.
மையத்தை தொடங்கி வைத்து பார்வையிட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி, இந்த மையத்தில் பொருட்களை வாங்குவதன் மூலம், மகளிர் சுய உதவிக்குழுவினரின் வாழ்க்கைத் தரத்தை பொதுமக்கள் உயர்த்த வேண்டும், என்றார். முன்னதாக, மகளிர் சுய உதவிக்குழுவினரால் செயல்படுத்தப்படும், ஆவின் விற்பனை நிலையத்தையும் ஆட்சியர் பார்வையிட்டார்.