

உலக மகளிர் தினத்தை ஒட்டி நேற்று தருமபுரி சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத் திட்டத்துறை மற்றும் மகளிர் திட்டம் ஆகியவற்றின் சார்பில் மகளிர் தின விழா நடந்தது. தருமபுரி அரசு கலைக் கல்லூரி கலை அரங்கில் நடந்த இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில், குழந்தைத் திருமண தடுப்பு குறித்த குறும்படத்தை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். பின்னர் அவர் பேசியது:
தருமபுரி மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் என்பதே இல்லாத நிலையை உருவாக்கும்போது தான் மகளிர் தின விழா மகிழ்ச்சியானதாக இருக்கும். தற்போதும் கூட நம் மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் நடந்து வருவது மிகுந்த வருத்தத்தையும், கவலையையும் தருகிறது. இளம் வயது திருமணம், குழந்தைத் திருமணம் இல்லாத நிலையை உருவாக்க அனைவரும் உறுதி கொள்ள வேண்டும்.
பெண் கல்வி விவகாரத்தில் தருமபுரி மாவட்டத்தில் முன்பிருந்த நிலை மாறியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் தருமபுரி மாவட்டத்தில் பெண் கல்வி முன்னேற்றம் நல்ல முறையில் உள்ளது. அதேபோல, பெண்கள் கல்வியை மட்டுமே முக்கியமானதாக கருதிவிடக் கூடாது. பெண்கள் வாழ்க்கையையும் பாடமாக படிக்க வேண்டும். பெண் கல்வியிலும், பெண்களின் வளர்ச்சியிலும் முதன்மை பெற்ற மாவட்டமாக தருமபுரி மாவட்டம் உருவாக வேண்டும். பெண் குழந்தைகளை காப்போம், குழந்தை திருமணத்தை தடுப்போம், பெண்கள் கல்வியை ஊக்குவிப்போம் என்ற 3 கட்டளைகளை முழுமையாக நிறைவேற்ற இன்று உறுதியேற்போம். இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து, விளையாட்டுத் துறையில் பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவியருக்கும், தடகளப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாற்றுத் திறன் மாணவிகளுக்கும் ஆட்சியர் பரிசுகளை வழங்கினார்.
அதேபோல, தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் வெண்ணாம்பட்டி காவல்துறை ஆயுதப்படை வளாக மண்டபத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் தலைமையில் மகளிர் தின விழா நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில், ஏடிஎஸ்பி-க்கள் அண்ணாமலை, குணசேகரன், புஷ்பராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.