

திருத்தணி: பள்ளிப்பட்டு அருகே கரும்பு தோட்டத்தில் நடமாடிய 3 காட்டு யானைகளை, வனத் துறை மற்றும் காவல் துறையினர் ஆந்திர வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
ஆந்திர மாநிலம், திருப்பதி, ஷேசாசலம் வனப்பகுதியிலிருந்து, வழி தவறிய 3 காட்டு யானைகள், தமிழக எல்லையை ஒட்டியுள்ள, ஆந்திர மாநில பகுதியான சத்திரவாடா உள்ளிட்ட வனப்பகுதிகள், விவசாய நிலப்பகுதிகளில் 4 நாட்களுக்கு மேலாகச் சுற்றித் திரிந்தன.
அந்த யானைகள், கடந்த 6-ம் தேதி மாலை, ஆந்திர மாநிலம், ஏகாம்பரகுப்பத்தை ஒட்டியுள்ள தமிழகப் பகுதிகளான கொல்லாலகுப்பம், சாமந்தவாடா, நெடியம் பகுதிகளில் உள்ள வனப்பகுதிகள் மற்றும் சில விவசாய நிலங்களில் சுற்றித் திரிந்தன.
இந்நிலையில், பள்ளிப்பட்டு அருகே ஈச்சம்பாடி கிராமத்தில் உள்ள விவசாயிகள் இருவருக்குச் சொந்தமான 6 ஏக்கர் கரும்பு தோட்டத்தில் நேற்று முன்தினம் காலை அந்த 3 காட்டு யானைகள் புகுந்தன.
இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட வன அலுவலர் ராம் மோகன், திருத்தணி ஏஎஸ்பி சாய் பிரணீத் ஆகியோர் தலைமையிலான வனத் துறையினர், போலீஸார் இணைந்து, வனப்பகுதிகளுக்கு விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். 13 மணி நேரத்துக்கு மேல் நீடித்த அப்பணியில் நேற்று முன்தினம் இரவு கரும்பு தோட்டத்தை விட்டு, யானைகள் வெளியேறின.
அந்த யானைகளை, மேளம் அடித்தும், பட்டாசு வெடித்தும், ஆந்திர மாநிலம், தர்மமகாராஜபுரம் வனப்பகுதிகளுக்குள் விரட்டியடித்தனர். இருப்பினும், தர்மமகாராஜபுரம் பகுதியிலிருந்து, தமிழக எல்லை சுமார் 6 கிமீ தூரத்தில் உள்ளதால், மீண்டும் யானைகள் தமிழகப் பகுதி விளை நிலங்களுக்கும், ஆந்திர பகுதி விளை நிலங்களுக்கும் வர வாய்ப்புள்ளது.
ஆகவே, யா னைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி, ஷேசாசலம் வனப்பகுதிக்குச் செல்லுமாறு செய்யும் நடவடிக்கைகளில், ஆந்திரா மற்றும் தமிழக வனத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.