

சென்னை: உலக மகளிர் தினத்தையொட்டி நேற்று சென்னை தரமணியில் உள்ள அப்போலோ புரோட்டான் புற்றுநோய் மருத்துவமனையில், பெண்களின் புற்றுநோய் அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் ‘ஸ்கிரீன் டு வின்’ என்ற விழிப்புணர்வு செயல் திட்டம் தொடங்கப்பட்டது.
அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் துணைத் தலைவர் ப்ரீதா ரெட்டி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு, பெண்களுக்கான புற்றுநோய் கண்டறியும் நடமாடும் பரிசோதனை வாகனத்தை தொடங்கி வைத்தார். இந்த வாகனம் ஓராண்டில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மாதத்துக்கு சுமார்2 ஆயிரம் பெண்களுக்கு இலவசபுற்றுநோய் பரிசோதனை செய்வதுடன், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தஉள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கனிமொழி பேசியதாவது: பொதுவாக, பெண்கள் தங்கள் மீது அக்கறை காட்டுவது இல்லை. அப்படி இருக்காமல், தங்கள் உடல்நலத்தில் அவர்கள் அதிக கவனம்செலுத்த வேண்டும். தமிழக அரசின்‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் போல, இந்த வாகனம் பெண்களை தேடி செல்ல உள்ளது.புற்றுநோய் பரவல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
குறிப்பாக, மார்பகம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அதிகமாக உள்ளது. நம் உடல்நிலையை நாம் பார்த்துக் கொள்ளவில்லை என்றால் குடும்பத்தின் பொருளாதாரம் சீரழிந்து, குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். எனவே, உடல்நலம் என்பது மிகவும் முக்கியமானது. பெண்கள் தயங்காமல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் துணைத் தலைவர் ப்ரீதா ரெட்டி பேசியதாவது: புற்றுநோய்க்கான போரில் முன்னணியில் இருக்க வேண்டும் என்ற தொலைநோக்குடன் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம். புற்றுநோய் பரிசோதனைக்காக நடமாடும் வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பெண்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயை கண்டறிந்தால் உரிய சிகிச்சை மூலம் முழுமையாக குணமடையலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் மற்றும் மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.