

மங்கலம்பேட்டை பேரூராட்சித் தலைவர் பதவியை, கூட்டணியில் அறிவித்தபடி தங்களுக்கு தரக்கோரி காங்கிரஸார் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம், மங்கலம்பேட்டை பேரூராட்சித் தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அங்கு திமுகவைச் சேர்ந்த சாம்சத் பேகம் போட்டி வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்றார். அவரை ராஜினாமா செய்யக்கோரி கடலூர் மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் வற்புறுத்தியும், அவர் மறுத்து விட்டார். “மங்கலம்பேட்டை 14-வதுவார்டில் திமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளரை எதிர்த்து களமிறங்கி வெற்றி பெற்றவர் தான் இந்த காங்கிரஸ் உறுப்பினர் வேல்முருகன். இங்கு கூட்டணி தர்மம்குறித்து பேசாதது ஏன்?” என்கின்றனர் மங்கலம்பேட்டை திமுகவினர். திமுகவின் நீண்டகால பின்புலம் கொண்ட சாம்சத் பேகம்,“நாங்கள் ராஜினாமா செய்யத் தயார், ஆனால் அந்த வேட்பாளரை தவிர வேறு எவரையாவது வேட் பாளராக நிறுத்துங்கள்” என்கிறார்.
இதனிடையே கூட்டணித் தர்மத்தின் அடிப்படையில் பேரூராட்சித் தலைவர் பதவியை காங்கிரஸூக்கு வழங்க வலியுறுத்தி மங்கலம்பேட்டை பேரூராட்சியில் காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.