

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெற்ற அமோக வெற்றியைத் தொடர்ந்து, நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் பதவியை கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கியது. ஆனால், திமுக தலைமையை மீறி அக்கட்சியைச் சேர்ந்த ஜெயந்தி, போட்டி வேட்பாளராக களமிறக்கப்பட்டு, வெற்றி பெற்றார்.
திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, கடலூர் மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவராக வெற்றி பெற்றிருக்கும் ஜெயந்தியை சந்தித்து ராஜினாமா செய்ய வலியுறுத்தினர். ஆனால் அவரது கணவர் ராதாகிருஷ்ணன், தேர்தலுக்காக செலவு செய்திருப்பதாகவும், தன் மனைவி ராஜினாமா செய்ய முடியாது என்றும் கறாராக கூறி விட்டார்.
இதைத் தொடர்ந்து நெல்லிக்குப்பம் நகராட்சியில் துணைத்தலைவர் பதவியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு வழங்க முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே நெல்லிக்குப்பத்தில் துணைத்தலைவராக தேர்வான திமுகவைச் சேர்ந்த ஜெயபிரபா தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்து தலைமறைவானார். இரு தினங்களுக்குப் பின் ஜெயபிரபாவை கண்டுபிடித்து, ஒருவழியாக அவரை ராஜினாமா செய்ய சம்மதிக்க வைத்துள்ளனர்.
இதற்கிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சியினரையும் சமாதானம் செய்து, துணைத் தலைவர் பதவியை ஏற்க வைத்துள்ளனர். இந்த சமாதான முயற்சியின் ஒரு பகுதியாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை , துணைத் தலைவர் பதவியை துறக்கத் தயாராக இருக்கும் ஜெயபிரபாவுடன் சென்று கடலூர் மாவட்ட திமுகவினர் சந்தித்துள்ளனர். இதனால் அக்கட்சியினர் வேறுவழியின்றி வருத்ததோடு துணைத்தலைவர் பதவியை ஏற்க முன்வந்துள்ளனர்.