அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு 5 ஆண்டில் இரண்டு மடங்கான கடன்

அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு 5 ஆண்டில் இரண்டு மடங்கான கடன்
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான ஆர்.வைத்திலிங்கத்துக்கு கடந்த 5 ஆண்டில், கடன் தொகை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

தமிழக வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மை துறை அமைச்சரான ஆர்.வைத்திலிங்கம், நேற்று முன்தினம் அளித்த வேட்புமனு பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளதாவது:

2014 - 2015-ல் எனக்கு ரூ.8,57,116 வருமானம் வந்துள்ளது. என்னிடம் ரூ.63,000, எனது மனைவி தங்கத்திடம் ரூ.27,360 கையிருப்பு உள்ளது. எனது பெயரில் பல்வேறு வங்கிகளில் சேமிப்புக் கணக்குகளில் ரூ.2,48,670 மற்றும் நிரந்தர வைப்பு நிதி ரூ.10 லட்சம் உள்ளது. மனைவி பெயரில் வங்கியில் ரூ.1.02 லட்சம் உள்ளது.

என்னிடம் 3 சவரனும், மனைவியிடம் 33 சவரனும் நகைகள் உள்ளன. எனது பெயரில் 24.63 ஏக்கர் விவசாய நிலமும், பூர்வீக இடம் 23,692 சதுரஅடி நிலத்தில், 4,008 சதுரஅடியில் வீடு ஒன்றும், ரூ.4.50 லட்சம் மதிப்புள்ள ஸ்கார்பியோ கார் ஒன்றும் உள்ளது.

எனது பெயரில் உள்ள மொத்த அசையும் சொத்து மதிப்பு ரூ.27,74,080, என் மனைவி பெயரில் ரூ.10,71,129. எனது பெயரில் உள்ள மொத்த அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.1,91,67,323 (ரூ.1.91 கோடி). மனைவிக்கு அசையா சொத்துக்கள் இல்லை.

விவசாயியிடம் வாங்கிய கடன்

எனது மூத்த மகனும் விவசாயியுமான வை.பிரபுவிடம் ரூ.29.28 லட்சமும், பாபநாசம் செண்பகபுரம் எஸ்.வைத்திலிங்கத் திடம் ரூ.10 லட்சமும், செங்கிப்பட்டி தேவேந்திரனிடம் ரூ.10 லட்சமும் கைமாற்றுக் கடன் வாங்கியுள்ளேன்.

எனது இளைய மகன்கள் சண்முக பிரபு, ஆனந்த பிரபு ஆகியோரின் பெயர்களில் கூட்டாக ரூ.19,45,170 கல்விக் கடன், வீடு கட்டுமானக் கடன் நிலுவை ரூ.9,53,352 என மொத்தம் ரூ.78,26,522 (ரூ.78.26 லட்சம்) கடன் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இரண்டு மடங்கான கடன்

கடந்த 2011-ல் இதே தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த வைத்திலிங்கம், தனக்கு ரூ.38 லட்சம் கடன் உள்ளதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in