

மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசி கொடைவிழாவின் நிறைவு நாளான நேற்று நள்ளிரவு ஒடுக்கு பூஜை நடைபெற்றது. தமிழக, கேரள பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் வழிபாடு செய்தனர்.
இக்கோயிலின் 10 நாள் மாசி கொடைவிழா கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங் கியது. 6-ம் திருவிழாவன்று நள்ளிரவில் வலியபடுக்கை பூஜை நடந்தது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜை, வாகன பவனி ஆகியவை நடைபெற்றன. கரோனா கட்டுப்பாடுகளால் கடந்த இரு ஆண்டுகளில் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்த நிலையில், தற்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். கோயில் வளாகம் மற்றும் கடற்கரை பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
9-ம் திருவிழாவான நேற்று முன்தினம் இரவு சாயரட்சை தீபாராதனை, அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி, பெரிய சக்கர தீவெட்டி அலங்கார பவனி ஆகியவை நடைபெற்றன. விரதம் இருந்த பக்தர்கள் பெரிய சக்கர தீவெட்டியை ஏந்தி கோயில் வளாகத்தை சுற்றி வலம் வந்தனர். இதனைக் காண ஏராளமானோர் திரண்டனர்.
விழா நிறைவு நாளான நேற்று அதிகாலை அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி, சிறப்பு பூஜை, குத்தியோட்டம் ஆகியவை நடைபெற்றன. தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்து நேற்று வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் வந்திருந்ததால் கூட்டம் அலைமோதியது. கோயிலில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்து நின்று பகவதியம்மனை வழிபட்டனர். கடற்கரையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் திரண்டிருந்தனர்.
நேற்று இரவில் அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி வருதல் நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் அம்மனுக்கு ஒடுக்குபூஜை நடைபெற்றது. மண்டைக்காடு செல்லும் சாலையில் போக்குவரத்து நெருக்கடி நிலவியது. குமரி மாவட்ட அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.