Published : 09 Mar 2022 04:15 AM
Last Updated : 09 Mar 2022 04:15 AM

சாக்கடைகள் நிரம்பி வழிவது தான் ஸ்மார்ட் சிட்டியா? - நெல்லையில் ஆட்சியர் பயணிக்கும் வழியில் அசுத்தம்

பாளையங்கோட்டையில் எல்ஐசி அலுவலகம் அருகே கழிவு நீர் தேங்கிக்கிடக்கிறது. திருநெல்வேலியில் சாக்கடை பிரச்சினைக்கு எப்போது தீர்வு கிடைக்கும்? என்பது விடை தெரியாத கேள்வியாக உள்ளது. படம்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகரின் முக்கிய பகுதியான பாளையங்கோட்டை யிலுள்ள மண்டல எல்ஐசி அலுவலகத்தையொட்டி சாக்கடை நிரம்பி வழிவதால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகரில் பலகோடி ரூபாய் செலவில் பல கட்டங்களாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், மழைக் காலங்களில் சாக்கடைகள் நிரம்பி வழிந்து சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் தேங்கும் பிரச்சினை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சாக்கடை தேங்கியதும் நன்றாக இருக்கும் சாலைகளை உடைத்து அவற்றின் நடுவே அமைக்கப்பட்டிருக்கும் பாதாள சாக்கடை தொட்டிகளில் இருந்து கழிவுநீரை உறிஞ்சி எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

இந்நிலையில், பாளையங் கோட்டையில் முக்கிய தெருக்களில், சாலையோர கால்வாய்களில் சாக்கடை நிரம்பி வழிவது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அந்தவகை யில் எல்.ஐ.சி. மண்டல அலுவலகத் தின் முன்பகுதியில் சாக்கடை நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. அதில் குப்பைகளும் மிதந்து கொண்டிருக்கின்றன.

எல்ஐசி அலுவலகத்துக்கு நூற்றுக்கணக்கானோர் தினமும் வந்து சென்று கொண்டிருக் கின்றனர். இப்பகுதியிலிருந்து செல்லும் புனிதவதியார் தெருவில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் கல்வி பயிலும் பள்ளிகள் இருக்கின்றன. மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இந்த வழியாகத்தான் அலுவலகங்களில் இருந்து தங்கள் இல்லங்களுக்கு சென்று வருகின்றனர்.

திருநெல்வேலியை ரூ.ஆயிரம் கோடி செலவிட்டு ஸ்மார்ட் சிட்டியாக்கும் கட்டுமானங்கள் மேற் கொள்ளப்பட்டுள்ள நிலையில், இது போன்ற சாக்கடை பிரச்சினைகள் தீர்வின்றி தொடர்கின்றன. திருநெல்வேலி மாநகராட்சியில் புதிதாக பொறுப்பேற்ற மக்கள் பிரதிநிதிகள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் எதிர்பார்ப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x