Published : 27 Jun 2014 09:28 PM
Last Updated : 27 Jun 2014 09:28 PM

தமிழகத்தின் சுற்றுலாப் பிரதேசங்களை மேம்படுத்த ஜெயலலிதா அரசு நடவடிக்கை

சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கும் மலைப்பிரதேசங்கள், வனப்பகுதிகள், அருவிகள் விழும் பகுதிகளை பேணிகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சென்னைத் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களும், அரசு உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்திற்குப் பிறகு இயற்கையைப் போற்றிப் பாதுகாக்க கீழ்கண்ட நடவடிக்கைகளை எடுக்க அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்:

1. வனப் பகுதிகள், அருவிப் பகுதிகள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள இயற்கை எழிலைப் பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் கூர் உணர்வு மற்றும் பாரம்பரிய மிக்க பகுதிகள் பாதுகாப்பு ஆணையம் ( (Tamil Nadu Authority for Preservation of Eco Sensitive and Heritage Areas)) என்ற ஓர் அமைப்பு எனது தலைமையில் ஏற்படுத்தப்படும். இதற்கான சட்டமுன்வடிவு வரும் சட்டமன்ற கூட்டத் தொடரின் போது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படும்.

2. இந்த ஆணையம் சுற்றுச்சூழல் கூர் உணர்வு மற்றும் பாரம்பரியம் மிக்க அனைத்துப் பகுதிகளையும் பாதுகாக்கத் தேவையான அதிகாரங்களை கொண்டதாக அமையும்.

3. குற்றால அருவியின் தூய்மையைப் பாதுகாக்கவும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

4. குற்றாலம் பகுதியில் தேவையான விளக்குகள் பொருத்தப்படுவதோடு போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

5. பழைய குற்றாலம் மற்றும் பிரதான அருவி பகுதிக்கு இடையே சிற்றுந்துகள் இயக்கப்படும்.

6. குற்றாலத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்தப்படும்.

7. சுற்றுலாப் பயணிகள் குப்பைகளை குப்பைத் தொட்டியில் போட வசதியாக, ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள் வைக்கப்படும்.

8. குற்றாலத்தில் உள்ள அரசிற்கு சொந்தமான பழைய குடில்கள் இடிக்கப்பட்டு, அடுக்குமாடிக் கட்டடம் கட்டப்படும். இந்த அடுக்குமாடிக் கட்டடம், சுற்றுலாப் பயணிகளின் தேவைக்கேற்ப, அனைத்து வசதிகளுடன் கூடிய துயில் கூடங்கள், ஒருவர் படுக்கும் அறை, இருவர் படுக்கும் அறை, கூடுதல் வசதிகளுடன் கூடிய பெரிய அறை ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமையும்.

9. குற்றாலத்தில் மகளிர் கழிவறைகள் மற்றும் உடை மாற்றும் அறைகள் கூடுதலாகக் கட்டப்படும்.

10. குற்றாலத்தின் முக்கியப் பகுதிகளான பேருந்து நிலையம், அருவிப் பகுதிகள், வாகன நிறுத்துமிடங்கள் போன்ற இடங்களில் சிசிடிவி காமராக்கள் பொருத்தப்படும்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அளித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x