வேலூர் மாநகரில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை அதிகரிப்பு: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

காட்பாடியில் பிரபல கம்பெனி பெயரில் விற்பனை செய்யப்பட்ட காலாவதியான ரவை பாக்கெட்.
காட்பாடியில் பிரபல கம்பெனி பெயரில் விற்பனை செய்யப்பட்ட காலாவதியான ரவை பாக்கெட்.
Updated on
2 min read

வேலூர் மாநகரில் ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு சில கடைகளில்காலாவதியான உணவுப்பொருட்கள் விற்பனை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. மனித உடலுக்கு ஆபத்தையும், பல்வேறு நோய்களை உருவாக்கும் வியாபாரிகள் மீது மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காலாவதியான உணவுப்பொருட்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் என உணவு பாதுகாப்புச்சட்டம் கூறுகிறது. ஆனால், ஒரு சில கடை உரிமையாளர்கள் அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு உணவு பொருட்கள் மீது குறிப்பிட்டப்பட் டுள்ள காலாவதியான தேதியை மாற்றிவிட்டு, அதே பொருளை மீண்டும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் இத்தகைய விபரீத செயல்கள் அதிகமாக நிகழ்கிறது. காலாவதியான உணவுப் பொருட்களை வாங்கி பயன்படுத்தும் பொதுமக்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகின்றனர்.

உணவு பாக்கெட்களில் தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி குறிப்பிட்டிருக்கும். உணவுப் பொருள் தயாரிப்பு தேதியில் இருந்து 6 மாதம் முதல் 9 மாதம் அல்லது 1 ஆண்டுக்கு பயன்படுத்தும் வகையில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

நகர்ப்புறங்களில் வசிக்கும் ஒரு சில மக்கள் காலாவதி தேதியை கவனித்தாலும், கிராமப்புறங்களிலும், ஊருக்கு ஒதுக்குப்புறமான கடைகளில் விற்பனையாகும் உணவுப்பொருட்களை யாருமே சரிபார்ப்பது கிடையாது.இதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் பெரிய, பெரிய நிறுவனங்கள் கூட தங்களது காலாவதியான உணவுப் பொருட்களை மறு தேதியிட்டு சிறிய கடை வியாபாரிகளிடம் பாதி விலைக்கு விற்றுவிடுகின்றனர்.

பாதி விலைக்கு கிடைப்பதால் காலாவதியான உணவுப்பொருட் களையே சிறிய வியாபாரிகள் வாங்கி வந்து விழிப்புணர்வு இல்லாத மக்களிடம் அதை முழு விலைக்கு விற்று கொள்ளை லாபம் பார்க்கின்றனர். அத்தகையை பொருட்களை வாங்கிச்செல்லும் ஒரு சிலர் அது காலாவதியான பொருள் என தெரிய வந்து, அதை மீண்டும் கடைக்கு கொண்டு வந்து கடைக்காரிடம் விளக்கம் கேட்கும் போது, அதை அப்போது தான் பார்த்தது போல் வாங்கி பார்த்து அதை மாற்றி புதிய பொருட்களை வழங்கி சிறு வியாபாரிகள் சமாளித்து விடுகின்றனர்.

திரும்பி வந்து கேட்காத நிறைய பேர் காலாவதியான பொருட்களை சமைத்து சாப்பிட்டு அதன் பிறகு, உடல் உபாதை ஏற்பட்டு, மருத்துவமனைக்கும், மருந்தகத்துக்கும் செல்கின்றனர். மக்களின் உடல் ஆரோக்கியத்துடன் விளையாடும் இது போன்ற வியாபாரிகள் மீதும், வணிக நிறுவனங்கள் மீதும் உணவு பாதுகாப்புத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.

இது குறித்து காட்பாடி பகுதியைச் சேர்ந்த வாசகர் ஒருவர் கூறும்போது, ‘‘எங்கள் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் சிறிய டிபார்ட்மென்ட் ஸ்டோர்ஸ் ஒன்று உள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு அங்கு சென்று உப்புமா செய்ய பிரபல நிறுவனம் பெயர் கொண்ட ரவை பாக்கெட் ஒன்றை வாங்கி வந்தேன். அதை பிரிப்பதற்கு முன்பு காலாவதியான தேதியை சரிபார்த்தபோது அது கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை காலத்தில் சிறப்பு விலை சலுகையுடன் வழங்கப்பட்ட ரவை பாக்கெட் ஆகும்’. அதன் காலாவதி தேதி கடந்த ஜனவரி மாதத்துடன் முடிவடைந்து விட்டது. தற்போது மார்ச் மாதம் தொடங்கிய பிறகும் அந்த ரவை பாக்கெட் அதிக அளவில் அங்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து கடைக்காரரிடம் கேட்டபோது, அவர் காலாவதியான பொருளை வாங்கிக்கொண்டு தெரியாமல் வந்துவிட்டது, மாற்றி தருகிறேன் எனக்கூறினார். இதையெல்லாம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையினர் கண்காணிக்க வேண்டும். பெரிய, பெரிய கடைகளில் கூட இது போன்ற நிகழ்வுகள் நடக்கின்றன. ஆகவே, அனைத்து கடைகளிலும் உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு நடத்தினால், காலாவதியான உணவுப்பொருள் விற்பனை வேலூரில் குறையும்’’ என்றார்.

இது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களிடம் கேட்ட போது, ‘காலாவதியான உணவுப் பொருட்கள், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுப்பொருட்களை யாராவது விற்பனை செய்தால் பொதுமக்கள் எங்களிடம் புகார் அளிக்கலாம்.

அதன்பேரில், ஆய்வு நடத்தப்பட்டு, கடை உரிமையாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in