Published : 08 Mar 2022 08:30 PM
Last Updated : 08 Mar 2022 08:30 PM

மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டை பாதுகாத்திடுக: வேல்முருகன்

பண்ருட்டி தி.வேல்முருகன்

சென்னை: "நீதிமன்றத்தில் வலுவான வாதங்களை முன்வைத்து வாதிட்டு, மருத்துவக் கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இளநிலை மருத்துவம், பல் மருத்துவம் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கான அரசாணையை கடந்த அதிமுக அரசு வெளியிட்டிருந்தது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டின் அவசியத்தை, நியாயத்தை நீதியரசர் கலையரசன் தலைமையிலான குழு, பல்வேறு தரவுகளின் அடிப்படையில் ஆராய்ந்து உறுதிபடுத்தியதை அடுத்து, இந்த ஒதுக்கீடு சட்டமாக்கப்பட்டது. இந்த நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கில், 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை எதிர்த்து ஒன்றிய அரசு வாதிடுவது அதிர்ச்சி அளிக்கிறது. இது வேதனையானது. ஒன்றிய அரசின் இத்தகைய நிலைப்பாடு, ஏழை - எளிய மாணவர்களின் நலன்களுக்கும், கிராமப்புற மற்றும் தமிழ்வழியில் பயிலும் மாணவர்களின் நலன்களுக்கும் எதிரானது. முக்கியமாக, ஒன்றிய அரசின் செயல் சமூக நீதிக்கு எதிரானது.

கல்வி ஒரே மாதிரியாக இருந்தாலும் அக்கல்வியை பெறுவதில் உள்ள சூழல் தனியார் பள்ளி மாணவர்களுக்கும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஒரே மாதிரியாக, சமவாய்ப்புடையதாக இல்லை. மேலும், அரசுப் பள்ளிகளில் 85 விழுக்காடு பள்ளிகள் கிராமப்புறங்களில் தான் உள்ளன. கிராமப்புறங்களில் உள்ள ஒட்டு மொத்தப் பள்ளிகளில் 73 விழுக்காடு பள்ளிகள் அரசுப் பள்ளிகள்தான். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 70 விழுக்காட்டினர் தமிழ்வழியில் படிக்கிறார்கள். இதனையெல்லாம் கருத்தில் கொண்டு தான், ஓய்வு பெற்ற நீதியரசர் கலையரசன் தலைமையிலான குழு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்தது. ஆனால், 7.5 விழுக்காடு மட்டுமே இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்து அரசாணை வெளியிடப்பட்டது. இந்த 7.5 விழுக்காட்டையும் பொறுத்துக்கொள்ளாத ஒன்றிய அரசு, அந்த இட ஒதுக்கீட்டை சட்டத்திற்கு புறம்பானது என்று வாதிடுவது சரியல்ல.

நீட் தேர்வு என்பது மாநில உரிமைகளையும், சமூக நீதியையும் பாதிக்காது. அரசு நீட் தேர்வை நடத்தி, மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியலை மட்டுமே மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கும். மாநில அரசுகள், அந்தந்த மாநிலங்களில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டைப் பின்பற்றி மாணவர் சேர்க்கைகளை நடத்திக் கொள்ளலாம் என்று ஒன்றிய அரசு உறுதி மொழி அளித்துள்ளது. ஆனால், அந்த உறுதி மொழிகளை மீறி, அரசுப்பள்ளி மாணவர்களுக்கான தனி இடதுக்கீடு மருத்துவக் கல்வி தரத்தைப் பாதிக்கும். தகுதி அடிப்படையிலான மாணவர் சேர்க்கையை பாதிக்கும், நீட் தேர்வின் நோக்கத்தை நீர்த்துப் போகச் செய்துவிடும் என தற்போது ஒன்றிய அரசு வாதிடுவது வேடிக்கையானது. இது வன்மையாக கண்டிக்கதக்கது.

எனவே, மருத்துவக் கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டின் நியாயத்தையும், அவசியத்தையும் உணர்ந்து, நீதிமன்றத்தில் வலுவான வாதங்களை முன்வைத்து தமிழ்நாடு அரசு வாதிட வேண்டும். இடஒதுக்கீட்டை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதோடு, மாநில உரிமையையும், சமூக நீதியையும் தமிழ்நாடு அரசு நிலை நாட்ட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது” என்று வேல்முருகன் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x