Published : 26 Apr 2016 03:15 PM
Last Updated : 26 Apr 2016 03:15 PM

கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன், பத்மநாபன் வேட்புமனுத் தாக்கல்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி துணை ஆணையருமான ப.காந்திமதியிடம், பாஜக மாநில துணைத் தலைவரும், தெற்கு தொகுதி வேட்பாளருமான வானதி சீனிவாசன், தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி தமாகா சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.பத்மநாபன் ஆகியோர் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

வேட்புமனுவுடன் வானதி சீனிவாசன் இணைத்து வழங்கியுள்ள பிரமாணப் பத்திரத்தில், தனது பெயரில் ரூ.64 லட்சத்து 97 ஆயிரத்து 360 மதிப்புள்ள அசையும் சொத்துகள் இருப்பதாகவும், அதில், ரூ.20.39 லட்சம் மதிப்பிலான 95 பவுன் நகைகள், 16 லட்சம் மதிப்பிலான கார், ரூ.2 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள், இரண்டு வங்கிக் கணக்குகளில் ரூ.10.82 லட்சம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 5 இடங்களில் ரூ.4 கோடியே 60 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துகளும், கணவர் சீனிவாசன் பெயரில் ரூ.51 லட்சத்து 44 ஆயிரத்து 484 மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.70 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் அசையா சொத்துகளும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

வேட்புமனுத் தாக்கலுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "மத்தியில் எவ்வாறு மோடி தலைமையில் திறமையான நிர்வாகம் நடைபெறுகிறதோ, அதேபோல் தமிழக அரசியலில் நடைபெற ஆட்சி மாற்றம் தேவை.

ஆட்சி மாற்றத்தை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொள்வேன். மக் களின் அடிப்படை பிரச்சினைகளான குடிநீர், சாலை, போக்குவரத்து ஆகியவற்றுக்குத் தீர்வு ஏற்படுத்த மக்களின் கருத்தைக் கேட்டு திட்டங்களை அமல்படுத்துவேன். நான் போட்டியிடும் தொகுதிக்கு மட்டுமான தேர்தல் அறிக்கையை வரும் 4 நாட்களுக்குள் மக்களிடம் சமர்ப்பிப்பேன்" என்றார்.

சி.பத்மநாபன்

தேர்தல் வேட்பு மனுவுடன் சி.பத்மநாபன் இணைத்து வழங்கியுள்ள பிரமாணப் பத்திரத்தில் தனது பெயரில் ரூ.66 ஆயிரத்து 524 மதிப்புள்ள அசையும் சொத்து, ரூ.62 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பு அசையா சொத்து இருப்பதாகக் தெரிவித்துள்ளார்.

மனைவி மனோன்மணி பெயரில் அசையும் சொத்தாக ரூ. 5 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான நகைகள் உட்பட ரூ.5.68 லட்சம், அசையா சொத்தாக ரூ.1.25 கோடி இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

வேட்புமனுத் தாக்கலுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கோவை மாநகரில் சாலைகள் அனைத்தும் படுமோசமான நிலையில் காணப்படுகின்றன.

கோவை நஞ்சப்பா சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக என்று கூறி கட்டப்படும் மேம்பாலமும் மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்றார் போல் இல்லை.

நஞ்சப்பா சாலையில் தொடக்கத்தில் அந்த மேம்பாலத்தில் ஏறினால் டெக்ஸ்டூல் பாலத்தை அடுத்துதான் இறங்க முடியும். இந்த பாலம் நூறு அடி சாலை, கிராஸ்கட் சாலை ஆகியவற்றின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க எவ்விதத்திலும் உதவாது.

இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி மக்களின் வரிப் பணத்தை விரயம் செய்கின்றனர்.

கோவை மாநகராட்சியில் வசிக்கும் சுமார் 16 லட்சம் மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட வரிப்பணத்தில் அமைச்சர் தொகுதிக்காக மட்டுமே அவர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ரூ.80 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

15 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த பிரச்சினைகளைத் தீர்க்க அதிக கவனம் செலுத்துவேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x