

கரூர்: இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு ஒதுக்கப்பட்ட புலியூர் பேரூராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்ற திமுக வார்டு உறுப்பினர் புவனேஸ்வரி, தனது தலைவர் பதவியை இன்று (மார்ச் 8ம் தேதி) ராஜினாமா செய்தார்.
கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி 8வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் அடைக்கப்பன் போட்டியின்றி தேர்வான நிலையில் 14 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக 12 இடங்களிலும், 1வது வார்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி க.கலாராணி, 4வது வார்டில் பாஜக ப.விஜயகுமார் ஆகியோர் வெற்றி பெற்றனர். புலியூர் பேரூராட்சித் தலைவர் பதவி திமுக கூட்டணியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் திமுகவினர் அதிருப்தியடைந்தனர்.
புலியூர் பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த 4-ம் தேதி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பேரூராட்சித் தலைவர் பதவி வேட்பாளர் க.கலாராணி வந்திருந்த நிலையில், திமுகவினர் அவரது பெயரை முன்மொழியாமல் திமுகவைச் சேர்ந்த 3வது வார்டு உறுப்பினர் புவனேஸ்வரியை தலைவராக திமுகவினர் முன்மொழிந்தனர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பேரூராட்சித் தலைவர் வேட்பாளரான க.கலாராணி உள்ளிட்ட வேறு யாரும் தலைவர் பதவிக்கு போட்டியிடாததால் புவனேஸ்வரி போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் ஏமாற்றமடைந்த கலாராணி மற்றும் அவருடன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் செய்ய முயன்றனர். டிஎஸ்பி தேவராஜன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியலை கைவிட்டனர். மேலும், தேர்தல் முறையாக நடைபெறவில்லை. நல்ல முடிவு வழங்கப்பட வேண்டும் என கலாராணி தெரிவித்தார்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவரை வந்து சந்திக்கக் கூறியிருந்தார். புவனேஸ்வரி கணவருடன் கடந்த 4-ம்தேதி சென்னை சென்றுவிட்டார். அதன் பிறகு புலியூர் திரும்பிய புவனேஸ்வரி புலியூர் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் பாலசுப்பிரமணியத்திடம் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்து இன்று கடிதம் வழங்கினார்.