

திருப்பூர்: தத்தனூரில் தொழில் பூங்கா அமைக்கும் திட்டத்தை ரத்துச் செய்யக் கோரி மனு அளித்த கிராம மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் வினீத் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் அவிநாசி அருகே தத்தனூர், புலிப்பார், புஞ்சை தாமரைக்குளம் ஆகிய ஊராட்சிகளின் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பாக கோரிக்கை மனு அளித்ததுடன், அனைவரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆட்சியருக்கு கிராம மக்கள் வழங்கிய மனுவில் கூறியதாவது:
"தத்தனூர், புஞ்சை தாமரைக்குளம், புலிப்பார் கிராமங்களில் 30 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகிறோம். நாங்கள் அனைவரும் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த கால்நடை வளர்த்தல், பால் உற்பத்தி, விவசாய கூலி வேலைகளை செய்து வருகிறோம். பெருந்துறையில் உள்ள சிப்காட் தொழிற்சாலைகளால் இந்த பகுதியை சுற்றியுள்ள மக்கள் நிலத்தடி நீர் மாசுபாட்டாலும், புற்றுநோய், தோல் நோய் போன்ற பிரச்சினைகளால் அவதியடைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தத்தனூர் ஊராட்சியில் சிப்காட் அமைவதை மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அரசிடம் பலமுறை மனு அளித்து, போராட்டங்கள் நடத்தியன் பலனாக, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தத்தனூர் சிப்காட் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது சிப்காட் தொடர்பாக வரைபடம் தயாரிப்பதற்கு மறு ஆய்வு செய்ய அதிகாரிகள் வந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
எனவே சிப்காட் திட்டம் ரத்து செய்யப்பட்டு சிப்காட் அமையாது என அரசு தெளிவுபடுத்தி அரசாணை வழங்கி மக்களை வாழ வைக்க வேண்டும். என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்."
மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர், சிப்காட் தொடர்பாக எவ்வித திட்டமும் வரவில்லை என பொதுமக்களிடம் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தர்ணா போராட்டம் முடிவுக்கு வந்தது.
இதனிடையே, தமிழக செய்தித் துறை அமைச்சர் சாமிநாதனை, கிராம மக்கள் நேரில் சந்தித்துள்ளனர். அப்போது சட்டப்பேரவைத் தேர்தலின் போது பிரச்சாரத்துக்கு வந்த எம்.பி.கனிமொழி, தத்தனூர் பகுதியில் சிப்காட் திட்டம் நிச்சயம் வராது. தடுத்து நிறுத்தப்படும். போராடும் மக்களுடன் திமுக களத்தில் நிற்கும் என்று கூறியதை நினைவுப்படுத்தி கிராம மக்களை சமாதானம் செய்து அனுப்பிவைத்துள்ளார்.