

கோவை: கல்வி கற்பதற்காக உக்ரைனுக்கு சென்றிருந்த கோவையைச் சேர்ந்த இளைஞர், அந்நாட்டு ராணுவத்தில் இணைந்து பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே கடந்த மாதம் 24-ம் தேதி முதல் போர் நடந்து வருகிறது. 13- வது நாளாக போர் நடந்து வருகிறது. உக்ரைனில் நடக்கும் போரைத் தொடர்ந்து அங்குள்ள வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் அண்டை நாடுகளின் வழியாக வெளியேறி வருகின்றனர். அங்கு கல்வி கற்கச் சென்ற இந்திய மாணவர்களை மத்திய அரசுக் குழுவினர் ஆபரேஷன் கங்கா திட்டம் மூலம் மீட்டு வருகின்றனர்.
இச்சூழுலில் உக்ரைன் ராணுவத்தில் இணைந்து பணியாற்ற விருப்பம் உள்ள மக்கள் நாட்டின் பாதுகாப்புக்காக இணைந்து பணியாற்றலாம் என அந்நாடு அறிவித்தது.
இதையடுத்து ஏராளமானோர் அந்நாட்டின் ராணுவத்துக்கு உட்பட்ட துணை ராணுவப் படைகளில் இணைந்து பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தின் , கோவை துடியலூர் அருகேயுள்ள சுப்பிரமணியம்பாளையத்தைச் சேர்ந்த சாய்நிகேஷ் என்ற இளைஞரும் உக்ரைன் துணை ராணுவத்தில் இணைந்து பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது.
மாணவர் சாய்நிகேஷ் உக்ரைன் நாட்டின் கார்கோ நேஷனல் ஏரோபோர்ஸ் பல்கலைக்கழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் ஏரோனாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்து வருகிறார். தற்போது அவர் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இச்சூழலில் அந்நாட்டு அரசின் கோரிக்கையை ஏற்று , உக்ரைன் ராணுவத்தின் துணை ராணுவப் படையான ஜார்ஜியன் நேஷனல் லிஜியன் என்ற துணை ராணுவப் படையில் இருந்து பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது. இதையறிந்த மத்திய , மாநில உளவுத்துறையினர் கோவையில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் இது தொடர்பாக விசாரித்து உள்ளனர்.
உக்ரைனில் உள்ள அவர் தனது குடும்பத்தினரிடம் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளார். இது தொடர்பாகவும் உளவுத்துறையினர் விசாரித்து உள்ளனர்.
மேலும் , மாணவர் சாய் நிகேஷ் இந்திய ராணுவத்தில் சேர விரும்பியதும் , ஆனால் அதற்கேற்ப உயரம் இல்லாததால் சேர முடியவில்லை என்பதும் தெரியவந்தது.