

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகில் உள்ள தும்பைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி மாயமானதாக பிப்.15-ம் தேதி மேலூர் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
விசாரணையில், இந்த மாணவி தும்பைப்பட்டியைச் சேர்ந்த நாகூர் ஹனிபா என்பவரைக் காதலித்ததாகவும், அவர் மாணவியை ஈரோடுக்கு அழைத்துச் சென்றதும், அங்கு உறவினர் வீட்டில்தங்கி இருந்தபோது போலீஸார்தேடுவதை அறிந்து மாணவிக்கு எலி மருந்து விஷம் கொடுத்துஉள்ளார். அதை சாப்பிட்ட மாணவி மயங்கி விழுந்தார். நாகூர் ஹனிபா விஷத்தை சாப்பிடாமல் துப்பிவிட்டார் எனத் தெரியவந்தது.
இதற்கிடையில் மார்ச் 3-ம் தேதி மாணவியை மயங்கிய நிலையில் சிலர் ஆட்டோவில் கொண்டு வந்துஅவரது தாயாரிடம் ஒப்படைத்துவிட்டு தப்பினர். மதுரை அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இதுகுறித்து மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் கூறும்போது, மருத்துவர்களின் ஆய்வில் மாணவி எலி மருந்து விஷம் சாப்பிட்டு உயிரிழந்ததாகவும், கூட்டு பாலியல் தொந்தரவால் இறக்கவில்லை எனவும் தெரியவந்ததாகவும் குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக நாகூர் ஹனிபா, அவரது தாயார் மதினா பேகம் உட்பட 8 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடிவருகின்றனர்.
இந்நிலையில் 15 நாட்களுக்கு முன்பு புகார் கொடுத்தும் மாணவியை மீட்க காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை, கூட்டு பாலியல் தொந்தரவில் தங்கள் மகள் இறந்ததாகப் பெற்றோர், உறவினர்கள் புகார் தெரிவித்து உடலை வாங்க மறுத்தனர்.
இச்சம்பவத்தில் உண்மையான விசாரணை நடத்த வலியுறுத்தி பாஜக, மூவேந்தர் முன்னேற்றக் கழகம், தென்னிந்திய பார்வர்டு பிளாக் உள்ளிட்ட அமைப்பினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தும்பைப்பட்டியில் சாலை மறியல் செய்தனர்.
இந்நிலையில் மாணவியின் உறவினர்கள், பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் மதுரை அரசுமருத்துவமனை பிரேதப் பரிசோதனை அறை முன்பு நேற்று காலை திரண்டனர். சமரச பேச்சுவார்த்தைக்குப் பிறகு பிரேதப் பரிசோதனைக்கு பெற்றோர், உறவினர்கள் ஒப்புக் கொண்டனர்.
மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர், மேலூர் ஆர்டிஓ பிர்தெளஸ் பாத்திமா முன்னிலையில் பிரேதப் பரிசோதனை நடந்தது. இது வீடியோ பதிவும் செய்யப்பட்டது. மாலை 4 மணி அளவில் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேசுவரா சுப்ரமணியன், பாஜக புறநகர் மாவட்டத் தலைவர் சுசீந்திரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
ஆம்புலன்ஸில் ஏற்றிய மாணவியின் உடலை கோரிப்பாளையம் தேவர் சிலை வழியாகக் கொண்டு செல்ல உறவினர்கள், பாஜகவினர் திட்டமிட்டனர். ஆனால் தேவர் சிலை முன்பு திடீர் சாலை மறியல் செய்யலாம் எனக் கருதி போலீஸார் மறுத்தனர்.
வைகை ஆறு வடகரை சாலை, ஆவின் சந்திப்பு வழியாக தும்பைப்பட்டிக்கு கொண்டு செல்ல அனுமதித்தனர். இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து பனகல் சாலையில் மறியல் செய்தனர். அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இருப்பினும், சிறிது நேரத்துக்குப் பின்பு போலீஸ் பாதுகாப்புடன் வைகை வடகரை சாலை வழியாக மாணவியின் உடல் தும்பைப்பட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.