

குன்னூர் அருகே நான்சச் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்குள் கரடி புகுந்ததால் மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளை நோக்கி வருகின்றன. இந்நிலையில், குன்னூர் அருகே நான்சச் பகுதியிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளிக்குள் கரடி ஒன்று புகுந்தது. அங்கு உணவு எதுவும் கிடைக்காததால், வெகுநேரமாக அந்த பகுதியில் சுற்றித் திரிந்தது. வகுப்பறைகளுக்குள் புகுந்து மேஜை, நாற்காலிகளை சேதப்படுத்தியது.
பின்னர் அருகில் இருந்த சத்துணவு அறையின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, சமையல் பொருட்களை சேதப்படுத்தியது.
இதனால், அந்த பள்ளிக்கு தற்போது மாணவர்களை அனுப்ப பெற்றோர் அச்சப்படுகின்றனர். பள்ளி நிர்வாகமும், பொதுமக்களும் வனத்துறையினரை அழைத்து, கரடியை விரைவில் கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்தனர். பள்ளியை ஆய்வு செய்து, கரடியை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.