

திருத்தணி: ஆந்திர மாநிலம் - திருப்பதி, ஷேசாசலம் வனப்பகுதியிலிருந்து, 3 காட்டு யானைகள், தமிழக எல்லையை ஒட்டியுள்ள, ஆந்திர மாநில பகுதியான சத்திரவாடா உள்ளிட்ட வனப்பகுதிகள் மற்றும் அதை ஒட்டியுள்ள ஏகாம்பரகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் கடந்த 4 நாட்களுக்கு மேலாகச் சுற்றித் திரிகின்றன.
இதையடுத்து, ஆந்திர வருவாய்த் துறை மற்றும் வனத் துறையினர், பொதுமக்களுக்கு எவ்விதஇடையூறும் ஏற்படாதவாறு,யானைகள் நடமாட்டத்தைக் கண்காணித்து, அவற்றை வனப்பகுதிகளுக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், அந்த 3 காட்டு யானைகள் நேற்று முன்தினம் மாலை, ஏகாம்பரகுப்பத்தை ஒட்டியுள்ள தமிழகப் பகுதிகளான கொல்லாலகுப்பம், சாமந்தவாடா, நெடியம் பகுதிகளில் உள்ள வனப்பகுதிகள் மற்றும் சில விவசாய நிலப்பகுதிகளில் சுற்றித் திரிந்துள்ளன.
இதையடுத்து, திருத்தணி கோட்டாட்சியர் சத்யா தலைமையில், வருவாய்த் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் பொதுமக்கள் இரவு நேரத்தில் நடமாடக் கூடாது என, தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.
இச்சூழலில், பள்ளிப்பட்டு அருகே ஈச்சம்பாடி கிராமத்தில் உள்ள விவசாயிகள் இருவருக்குச் சொந்தமான 6 ஏக்கர் கரும்பு தோட்டத்தில் நேற்று காலை காட்டு யானைகள் புகுந்தன. இதனால், ஈச்சம்பாடி மற்றும் அதனை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
நேற்று மாலை நிலவரப்படி, 8 மணி நேரத்துக்கு மேல் அந்த யானைகள், கரும்பு பயிர்களை நாசம் செய்து வருகின்றன.
திருவள்ளூர் மாவட்ட வனஅலுவலர் ராம் மோகன், திருத்தணிஏஎஸ்பி சாய் பிரணீத் ஆகியோர்தலைமையிலான வனத் துறையினர், போலீஸார் இணைந்து, டிரோன்கேமரா மூலம் 3 காட்டு யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து, முட்டை ஸ்பிரே மூலம் வனப்பகுதிகளுக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், வருவாய்த் துறை அதிகாரிகள், ஈச்சம்பாடி உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.