

ஆவடி: ஆவடி காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆவடி காவல் ஆணையரகம், சீருடை அணிந்த சேவையில் மகளிரின் பங்கை அங்கீகரித்துக் கவுரவிக்கும் விதமாக இன்று (மார்ச் 8) சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாட உள்ளது.
இதில், ஆவடி காவல் ஆணையரகத்தின் கீழ் உள்ள 25 காவல் நிலையங்கள் பெண் காவல் அதிகாரிகள் தலைமையில் இன்று செயல்பட உள்ளன. ஒரு காவல்ஆணையரகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் பெண் அதிகாரிகள் தலைமைதாங்குவது, இந்தியாவிலேயே இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆவடி காவல் ஆணையரகத்தின் உயர்மட்ட அளவில், தலைமையிடம், போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் பா.விஜயகுமாரி, இன்று ஆவடிசட்டம் மற்றும் ஒழுங்கு இணை ஆணையராகக் கூடுதல் பொறுப்புவகிக்க உள்ளார். அதேபோல், தலைமையகம் மற்றும் நிர்வாக காவல் துணை ஆணையர் கோ.உமையாள், ஆவடி, செங்குன்றம் காவல் துணை ஆணையராகச் செயல்பட உள்ளார் என, ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் இணை ஆணையர், துணை ஆணையர் அலுவலகங்களின் செயல்பாடுகளுக்குத் தலைமை தாங்க உள்ள பெண் காவல் அதிகாரிகளை நேற்று மாலை ஆவடி காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர், அம்பத்தூரில் செயல்படும் தற்காலிக காவல் ஆணையரக வளாகத்தில் சந்தித்து,வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.