

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களை கண்டித்து காங்கிரஸார் தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்றம்பல மேடையில் ஏறி (கனகசபை) நடராஜரை வழிபடச் செல்லும் பக்தர்களை தடுக்கும் தீட்சிதர்களை கண்டித்தும், சிற்றம்பல மேடையில் ஏறி பக்தர்கள் வழிபட தமிழக முதல்வரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நேற்று சிதம்பரத்தில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் ஜெமினி எம்என். ராதா தலைமை தாங்கினார். நகர்மன்ற உறுப்பினரும் மாவட்ட மூத்த துணைத் தலைவருமான தில்லை மக்கின் வரவேற்று பேசினார். நகர காங்கிரஸ் தலைவர் பழனி(என்ற) பாலதண்டாயுதம், மாவட்ட துணைத்தலைவர்கள் ரஜாசம்பத்குமார், சம்மந்தமூர்த்தி, குமார், நகர்மன்ற உறுப்பினர் மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ்கமிட்டி தலைவர் செந்தில்நாதன், முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு தீட்சிதர்களின் செயல்பாட்டை கண்டித்து பேசினர். நிர்வாகி ஸ்டீபன்முத்துப்பாண்டி நன்றி கூறினார். இதில் நடராஜர் கோயில் தீட்சிதர்களை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.