

புதுச்சேரியில் நேற்று மாலை வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது:
மக்கள் நலக்கூட்டணி - தேமுதிக கட்சிகள் தேர்தலில் புதுச்சேரியில் வெற்றி பெறும் என நம்புகிறேன். எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரியில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும். புதுச்சேரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான தனி மாநில அந்தஸ்து, ரூ.6500 கோடி கடன் தள்ளுபடி போன்றவற்றை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனே நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம். புதுவைக்கும் தனி மாநில அந்தஸ்து தர வேண்டும்.
தமிழகத்தில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள், அனைத்துக் கட்டுப்பாடுகளையும் மீறி பொதுமக்களுக்கு பணத்தை விநியோகித்து வருகின்றன. இதற்கு காவல்துறை, அரசு அதிகாரிகளே உடந்தையாக உள்ளனர். தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. கரூர் மாவட்டத்தில் பண நடமாட்டத்தை தடுத்த எஸ்.பி. வந்திதாவை கொல்வதற்கு நடந்த முயற்சி தொடர்பாக தீர விசாரிக்க வேண்டும். அரசியலில் தவறு செய்வோர் தண்டிக்கப்படுவது அவசியம்.
மதுரை, மாமண்டூரைத் தொடர்ந்து வரும் மே 11-ம் தேதி திருச்சியில் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் உள்பட கூட்டணியின் அனைத்து தலைவர்கள் பங்கேற் கும் ‘க்ளைமேக்ஸ் மாநாடு' நடைபெறவுள்ளது என்றார்.
இதனிடையே நேற்று திருப்போரூரில் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த வைகோ 150 இடங்களில் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.