Published : 09 Apr 2016 09:52 AM
Last Updated : 09 Apr 2016 09:52 AM

திமுக கூட்டணியில் போட்டியிடும் மமக, புதிய தமிழகம், முஸ்லிம் லீக் தொகுதிகள் அறிவிப்பு: ஆர்.கே.நகரில் திண்ணை பிரச்சாரம் தொடங்கினார் ஸ்டாலின்

திமுக அணியில் உள்ள மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் போட்டியிடவுள்ள தொகுதிகளின் விவரம் நேற்று அறிவிக்கப்பட்டன.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், புதிய தமிழகம், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை உள்ளன. இது தவிர, பெருந்தலைவர் மக்கள் கட்சி, சமூக சமத்துவப்படை, விவசாய தொழிலாளர் கட்சி ஆகியவற்றுக்கும் திமுக கூட்டணியில் தலா ஒரு சீட் வழங்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 41 இடங்கள் எவை என்பது குறித்த பட்டியல் நேற்று முன் தினம் வெளியிடப்பட்டது. இந்நிலையில், புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் ஆகியோர் திமுக தலைவர் கருணாநிதியை அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை தனித்தனியாக சந்தித்தனர். அப்போது அந்தக் கட்சிகள் போட்டியிடவுள்ள தொகுதிகளின் விவரம் குறித்த பட்டியல் கையெழுத்தானது.

அதன்படி, திமுக அணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு ராமநாதபுரம், ஆம்பூர், உளுந்தூர்பேட்டை, தொண் டாமுத்தூர், நாகப்பட்டினம் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள் ளன.

மமகவிலிருந்து பிரிந்து மனிதநேய ஜனநாயக கட்சியைத் தொடங்கியுள்ள தமிமுன் அன்சாரிக்கு அதிமுக தரப்பில் நாகப்பட்டினம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக அணியில் நாகப்பட்டினம் தொகுதி மமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய தமிழகம் கட்சிக்கு ஓட்டப் பிடாரம் (தூத்துக்குடி), வாசுதேவ நல்லூர் (திருநெல்வேலி), வில் லிப்புத்தூர் (விருதுநகர்), கிருஷ்ண ராயபுரம் (கரூர்) ஆகிய தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு வாணியம்பாடி (வேலூர்), பூம்புகார் (நாகை), கடையநல்லூர் (திருநெல்வேலி), மணப்பாறை (திருச்சி), விழுப்புரம் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இது தொடர்பான விவரங்களை புதிய தமிழகம் கட்சித் தலைவர் க.கிருஷ்ணசாமி மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் ஆகியோர் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தனர்.

திண்ணை பிரச்சாரம்

முதல்வர் போட்டியிடவுள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திண்ணைப் பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். அப்போது ‘முடங்கிய அரசு மூழ்கிய தமிழகம்’ ‘சொன்னாங்களே செய்தார்களா’ ஐந்தாண்டுகளாய் துருப்பிடித்துக் கிடக்கும் தமிழ்நாடு’ ஆகிய தலைப்புகளிலான துண்டுப் பிரசுரங்களை மு.க.ஸ்டாலின் வீடு வீடாக நேற்று விநியோகித்தார்.

இந்த பிரச்சாரத்தின்போது மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழகத்தில் கடந்த 5 ஆண்டு கால அதிமுக அரசில் அரங்கேறியுள்ள அவலங்களை பற்றிய விவரங்களை துண்டுப் பிரசுரங் களாக அச்சிட்டு 234 தொகுதிகளி லும் வீடு வீடாக சென்று விநியோகிப் பது என்று திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, ஆர்.கே.நகர் தொகுதியில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வருகிறோம்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது, மின்சாரக் கட்டணம், பால் விலை, பஸ் கட்டணம் எல்லாம் உயர்ந்து கொண்டே போகிறது. விலைவாசி விஷம் போல் உயர்ந்துள்ளது. 110 விதிகளின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இவற்றை மக்களிடம் எடுத்துச் சொல்லுகிற வகையில் திண்ணை பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளோம்.

முதல்வரின் தொகுதியான ஆர்.கே.நகரில் இந்த பிரச்சாரத்தை தொடங்கியுள்ளோம். ஏனென்றால், வெள்ளம் வந்தபோது கார் கண்ணாடியை கூட இறக்காமல் வாக்காள பெருமக்களே என்று ஆர்.கே.நகர் மக்களை பார்த்து முதல்வர் பேசினார். அவற்றை யெல்லாம் மக்களிடம் எடுத்துச் சொல்லவே, ஆர்.கே.நகரில் எங்களது பிரச்சாரத்தை தொடங்கியுள் ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

‘முடங்கிய அரசு மூழ்கிய தமிழகம்’ ‘சொன்னாங்களே செய்தார்களா’ ஆகிய தலைப்புகளிலான துண்டுப் பிரசுரங்களை மு.க.ஸ்டாலின் வீடு வீடாக நேற்று விநியோகித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x