

வேலூர் சரகத்தில் கொத்தடிமை முறை தொழிலாளர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக மீட்க வேண்டும் என டிஐஜி ஆனி விஜயா தெரிவித்தார்.
வேலூர் காவல் துறை சரகத்துக்கு உட்பட்ட 4 மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு மனித கடத்தலை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நடத்திய கருத்தரங்குக்கு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருத்தரங்குக்கு வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா தலைமை தாங்கி பேசும்போது, ‘‘தமிழகத்தில் தற்போதும் பல மாவட்டங்களில் கொத்தடிமை தொழிலாளர் முறை நடைமுறையில் உள்ளது. இதனைத் தடுக்க காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொத்தடிமை தொழிலாளர்களாக சிறுவர்கள் உட்பட யாராக இருந்தாலும் உடனடியாக அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேலூர் சரகத்தில் இதுவரை சுமார் 50 கிராமங்களில் கொத்தடிமை தொழிலாளர் முறை இருந்து வந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதில், ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அருகே கொத்தடிமை முறையில் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கொத்தடிமை தொழிலாளர் முறையால் பாதிக்கப்பட்டிருப்பதை காவல் துறையினர் அறிந்தால், அது தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியாக இல்லாமல் போனாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
முன்னதாக, இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் தொண்டு நிறுவனத்தின் தலைமை இயக்குநர் மெர்லின் பிரீடா கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழிக்க சட்ட வழி முறைகள் குறித்து விளக்கினார்.
கருத்தரங்கில், துணை காவல் கண்காணிப்பாளர்கள் ரவிச் சந்திரன் (கலால்), ராமமூர்த்தி (குடியாத்தம்), புகழேந்தி கணேஷ் (அரக்கோணம்) மற்றும் காவல் ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.