சாராய வியாபாரிகளுக்கு துணை போகும் காவல் துறையினரை கூண்டோடு இடமாற்றம் செய்க: திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
Updated on
2 min read

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகரைச் சேர்ந்த சில இளைஞர்கள் மீது சாராய வியாபாரிகள் தாக்குதல் நடத்தியதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் இரவு வாணியம்பாடியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, சாராய பாக்கெட்டுகளை கீழே கொட்டி தீ வைத்து கொளுத்திய பொதுமக்கள் காவல் துறையினருக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். இதனால், அங்கு பதற்றம் நீடித்து வருகிறது. 2-வது நாளாக வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, சாராய வியாபாரிகளுக்கு துணை போகும் காவல் துறையினரை கூண்டோடு இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம், பொதுமக்கள் கூறியிருப்பதாவது, ‘திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகரில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சாராய வியாபாரம் தங்கு தடையின்றி நடந்து வருகிறது. காவல் நிலையங்களில் இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும், காவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், சாராய வியாபாரிகள் மீது புகார் அளிக்கும் அப்பாவி மக்கள் மீது அடியாட்களை ஏவி தாக்குதல் நடத்துகின்றனர்.

திருப்பத்துார் மாவட்ட எஸ்.பி., யாக இருந்த விஜயகுமார் எடுத்த துரித நடவடிக்கையால் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள சாராயம் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அவர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. எஸ்.பி., விஜயகுமார் பணியிடமாற்றம் செய்யப்பட்ட பிறகு, வாணியம்பாடி சாராய வியாபாரிகள் மீது காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு உள்ளூர் திருவிழாவில் முன் விரோதம் காரணமாக சாராய வியாபாரிகள் பயங்கர ஆயுதங்களுடன், அடியாட்களை கொண்டு புகார் அளிக்கும் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்திய ரவுடிகளை கைது செய்ய வலியுறுத்தி நேற்று முன்தினம் வாணியம்பாடியில் சாலை மறியலில் ஈடுபட்டோம். அதன்பேரில், காவல் துறையினர் 2 பெண்கள் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வாணியம்பாடியில் சாராயம், கஞ்சா விற்பனையில் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ள சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். சாராய வியாபாரிகளுக்கு துணை போகும் வாணியம்பாடி காவல் துறையினரை கூண்டோடு இடமாற்றம் செய்ய வேண்டும்’’ என்றனர்.

இதையடுத்து, ஆட்சியரிடம் மனு அளிக்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர். ஆனால், புகார் மனுவை ஆட்சியர் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போட்டுவிட்டு செல்லுமாறு அதிகாரிகள் கூறினர்.

இதனை ஏற்க மறுத்த பொதுமக்கள், புகார் மனுவை ஆட்சியரை நேரில் சந்தித்து அவரிடம் தான் கொடுப்போம் எனக் கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதன்பிறகு அவர்களை சமாதானம் செய்த அதிகாரிகள் அந்த மனுவை பெற்றுக்கொண்டு அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in