

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று அந்தந்த துறைகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தனர். கூட்டத்தில் மொத்தம் 238 மனுக்கள் பெறப்பட்டன.
இந்நிலையில், மேல்விஷாரம் சாதிக்பாட்ஷா நகரைச் சேர்ந்த பொதுமக்கள், ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் முறையிட்டனர். அவர்கள் அளித்த மனுவில், ‘‘தங்களது வீடுகள் நீர்பிடிப்பு பகுதி என்பதால் தங்களது வீடுகள் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. தங்களுக்கு மாற்று இடத்தில் வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்தனர்.
அதேபோல், திமிரி அருகே வசிக்கும் நரிக்குறவர்கள் அளித்த மனுவில், ‘‘எங்கள் பகுதியில் 70 குடும்பங்களில் 30 குடும்பங்களுக்கு வீடு இல்லை. எங்களுக்கு வீடு கட்டிக்கொடுத்தால் போதும். வீடு இல்லாமல் சாலை ஓரத்தில் உறங்குகிறோம். எங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்’’ என்று தெரிவித்தனர். அவர்களுக்கு விரைவில் வீடு கட்டிக்கொடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உறுதியளித்தார்.