

ராமநாதபுரம்: "குண்டுச் சத்தங்களுக்கு இடையே 12 கி.மீட்டர் தூரம் நடந்தே உக்ரைன் எல்லையைக் கடந்து ருமேனியா வந்து சேர்ந்தோம்" என்று உக்ரைனில் இருந்து ராநமாதபுரம் திரும்பிய மாணவர் தனது அதிர்ச்சி அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே அழகன்குளத்தைச் சேர்ந்த நவாஸ்அலி, ஆயிஷா தம்பதியரின் மகன் முகம்மது ஆதீம் (21). இவர் உக்ரைன் நாட்டிலுள்ள கார்கிவ்வின் மிட்லேவ் நகரில் உள்ள கருங்கடல் தேசிய பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். உக்ரைன் மீது ரஷ்ய போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனின் தலைநகரான கீவ் மற்றும் கார்கிவ் பகுதிகளில்தான் கடும் போர் நடைபெற்று வருகிறது.
முகம்மது ஆதிம் தங்கியிருந்த பகுதியிலேயே குண்டு மழை பொழிந்த நிலையில், உக்ரைனில் இருந்து புறப்பட்டு ருமேனியா எல்லைக்கு வந்த அவரை, இந்திய அரசு தனது ’ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் மூலம் சொந்த ஊருக்கு அழைத்து வரப்பட்டார். வீட்டிற்கு வந்த அவரை பெற்றோர், உறவினர்கள் மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும், இனிப்பு வழங்கியும் வரவேற்றனர். உறவினர்கள் பலர் ஆரத்தழுவி வாழ்த்தினர். மேலும், கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக உக்ரைனில் சிக்கித்தவித்த மகன் சொந்த ஊர் திரும்பியதும் பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
தனது பயணம் குறித்து மாணவர் முகம்மது ஆதிம் கூறும்போது, ”நாங்கள் தங்கியிருந்து விடுதி அருகேயே அவ்வப்போது குண்டு மழை பொழிந்த வண்ணம் இருந்தது. ஒரு 11 மாடி அடுக்குமாடி குடியிருப்பு, சூப்பர் மார்க்கெட் ஆகியவை குண்டு வீசியதில் தரைமட்டமானதை கண்கூடாகப் பார்த்தேன்.
சொந்த ஊர் திரும்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு நானும் என்னுடன் இருந்த 67 தமிழக மாணவர்கள் உள்ளிட்ட 260 இந்தியர்கள், தங்கியிருந்த இடத்திலிருந்து 12 கிலோ மீட்டர் குண்டுச் சத்தங்களுக்கிடையே நடந்து வந்து, உக்ரைன் நாட்டின் எல்லையைக் கடந்து ருமேனியா நாட்டை வந்தடைந்தோம். அப்படி வரும்போது 100 மீட்டர் தூரத்தில் குண்டு மழை பொழிந்தது.
ருமேனியானின் குக்கரஸ்ட் விமான நிலையத்தில் இருந்து நமது நாடு ஏற்பாடு செய்த விமானத்தில் டெல்லி வந்து, அதன்பின் விமானத்தில் சென்னை வந்து கார் மூலம் வீடு வந்து சேர்ந்தேன்.
பல்கலைக்கழக விடுதிகளில் உள்ள பதுங்குகுழிகளில் தங்கியிருந்தோம். அப்போது போதிய அளவு குடிநீர், உணவு கிடைக்காமல் சிரமத்துக்கு உள்ளானோம். மின்சாரம், தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதன்பின் நமது நாட்டினர் அமைத்த வாட்ஸ் அப் க்ரூப் மூலம் இணைந்து சொந்த நாட்டிற்கு வந்து சேர்ந்தோம்.
உக்ரைனில் படிக்கும் மாணவர்களின் கல்வி தடைப்பட்டுள்ளதால், அவர்களின் கல்வியை இந்தியாவில் தொடர்வதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.